மும்பை : பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஒரு காலத்தில் ஆசியாவில் மிகச்சிறந்த அணிகளில் ஒன்றாக கருதப்பட்டது. இந்தியாவை விட டெஸ்ட் மற்றும் ஒரு நாள் கிரிக்கெட்டில் பாகிஸ்தான் சிறப்பாக செயல்பட்ட காலமும் இருக்கின்றது. பாகிஸ்தான் அணியில் தலைசிறந்த பேட்ஸ்மேன்கள், பந்து வீச்சாளர்கள், சுழற் பந்துவீச்சாளர்கள் என்று ஒரு காலத்தில் உலக கிரிக்கெட்டை ஆட்டி படைத்தது.
அப்படி இருந்த பாகிஸ்தான் தற்போது ஒரு கத்துக்குட்டி அணியை போல் சொதப்பி வருகின்றது. பாகிஸ்தான் 2022 டி20 உலக கோப்பை இறுதிப் போட்டிக்கு சென்றது. அதன் பிறகு அவர்கள் எந்த ஒரு குறிப்பிட தகுந்த வெற்றியும் பெறவில்லை. சொந்த மண்ணில் நடைபெற்ற ஆசிய கோப்பை,இந்தியாவில் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை மற்றும் 2024 டி20 உலக கோப்பை என எந்த தொடரிலும் பாகிஸ்தான் அணி கோப்பையை வெல்லாமல் சென்று விட்டது.

பாகிஸ்தான் அணியில் வீரர்களுக்கிடையே ஒற்றுமை இல்லை என்று பாகிஸ்தான் அணியில் ஒருநாள், டி20 போட்டிகளுக்கான தலைமை பயிற்சியாளர் கேரி கிறிஸ்டன் கூறியிருந்தார். இந்த நிலையில் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட வங்கதேச அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.
இதில் யாருமே எதிர்பாராத வகையில் முதல் டெஸ்டில் பாகிஸ்தான் அணி தோல்வியை தழுவி இருக்கிறது. இந்த போட்டி முடிவடைந்த உடன் வீரர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு அது மோதலில் முடிந்ததாக செய்திகள் வெளியாகி உள்ளது. பாகிஸ்தான் அணி கேப்டன் ஷான் மசூதை வேகப்பந்துவீச்சாளர் சாகின் அப்ரிடி திட்டியதாக கூறப்படுகிறது.
அப்போது இருவருக்கும் கைகலப்பு ஏற்பட அதனை பாகிஸ்தான் நட்சத்திர வீரர் முகமது ரிஸ்வான் தடுக்க வந்த போது, ஷாகின் அப்ரிடி ரிஸ்வானை தள்ளி விட்டதாக கூறப்படுகிறது. இதனை உண்மை என்று நிரூபிக்கும் விதமாக தற்போது ஒரு சம்பவம் நடைபெற்றிருக்கிறது. பாகிஸ்தான் வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை வெள்ளிக்கிழமை தொடங்குகிறது.
இந்த போட்டியில் பாகிஸ்தான் அணியின் பிளேயிங் லெவனில் இருந்து ஷாகின் அப்ரிடி அதிரடியாக நீக்கப்பட்டிருக்கிறார். இது ரசிகர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. பாகிஸ்தான் அணியின் முன்னணி பவுலர்களில் ஒருவரான ஷாகின் அப்ரிடி நீக்கப்பட்டதிலிருந்து அவர் மோதலில் ஈடுபட்டிருக்கலாம் என்று தெரிவதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் ஷாகின் அப்ரிடி பந்துவீச்சில் சில குறை இருப்பதால் அதனை நிவர்த்தி செய்வதற்காக பயிற்சி செய்யப் போகிறார் என பாகிஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளர் ஜேசன் கில்லஸ்பி தெரிவித்துள்ளார். ஷாகின் அப்ரிடி வேக பந்துவீச்சிக்கு சாதகமான ஆஸ்திரேலியாவில் அவருடைய சராசரி 41 என்ற அளவில் இருந்தது. அது மட்டும் இல்லாமல் அவருடைய வேகமும் தற்போது குறைந்து இருக்கிறது. மேலும் வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்டில் 96 ரன்கள் விட்டுக் கொடுத்து இரண்டு பவுலர்களின் விக்கெட்டையே வீழ்த்தி இருந்தார்.
இதனால்தான் ஷாஹீன் அப்பிடி இரண்டாவது டெஸ்டில் விளையாடவில்லை என்று ஜேசன் கில்லஸ்பி கூறியுள்ளார். மேலும் ஷாகின் அப்ரிடிக்கு தற்போது தான் குழந்தை பிறந்திருப்பதால் அவர் குழந்தையுடனும் நேரம் செலவிட வேண்டும் என்பதற்காக தாங்கள் நேரம் ஒதுக்கி கொடுத்திருப்பதாகவும் கில்லஸ்பி கூறியுள்ளார். முதல் டெஸ்ட் போட்டியில் பிரதான சுழற் பந்துவீச்சாளர்கள் இல்லாமல் களம் இறங்கிய பாகிஸ்தான் அணியில் இரண்டாவது போட்டியில் அப்ரார் அகமத் என்ற லேக் ஸ்பின்னரும், மிர் ஹம்ஸா என்ற வேகபந்துவீச்சாளரையும் சேர்த்து இருக்கிறது.