டாக்கா: வங்கதேச அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் சர்ச்சைக்குரிய முறையில் ரன் அவுட் ஆன ஆத்திரத்தில், ஹெல்மெட் மற்றும் கிளவுஸை மைதானத்தில் வீசிய பாகிஸ்தான் வீரர் சல்மான் ஆகா மீது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அதிகாரப்பூர்வமாக ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளது. டாக்காவில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்த போட்டியில் பாகிஸ்தான் இன்னிங்ஸின் 39வது ஓவரில் சல்மான் ஆகா 64 ரன்கள் எடுத்திருந்த போது, வங்கதேச கேப்டன் மெஹிதி ஹசன் மிராஸால் சர்ச்சைக்குரிய முறையில் ரன் அவுட் செய்யப்பட்டார்.
பந்தை திருப்பிக் கொடுக்க முயன்ற போது ரன் அவுட் செய்யப்பட்டதால் கடும் அதிருப்தியடைந்த சல்மான் ஆகா, பெவிலியன் திரும்பும் போது தனது கிளவுஸ் மற்றும் ஹெல்மெட்டை மைதானத்தில் மிகவும் கோபமாக வீசி எறிந்தார். ஒரு சர்வதேச போட்டியின் போது கிரிக்கெட் உபகரணங்களை சேதப்படுத்துவது அல்லது தவறாக கையாளுவது என்பது ஐசிசி நடத்தை விதிமுறை லெவல் 1 மற்றும் பிரிவு 2.2ன் கீழ் குற்றமாகும்.

இந்த குற்றச்சாட்டை கள நடுவர்கள் அட்ரியன் ஹோல்ட்ஸ்டாக், தன்வீர் அகமது மற்றும் 3வது நடுவர் குமார் தர்மசேனா ஆகியோர் முன்வைத்தனர். போட்டி நடுவரான நீயாமூர் ரஷித் ராகுல் முன்னிலையில் சல்மான் ஆகா தனது தவறை முழுமையாக ஒப்புக்கொண்டார். இதையடுத்து லெவல் 1 விதியை மீறியதற்காக அவருக்கு அதிகாரப்பூர்வ கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், அவரது கணக்கில் 1 டிமெரிட் புள்ளியும் சேர்க்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மாதங்களில் அவர் செய்துள்ள முதல் விதிமீறல் இதுவாகும். பொதுவாக லெவல் 1 விதிமீறலுக்கு அபராதம் அல்லது அதிகபட்சமாக போட்டி கட்டணத்தில் இருந்து 50 சதவீதம் வரை அபராதம் மற்றும் 1 அல்லது 2 டிமெரிட் புள்ளிகள் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பரபரப்பான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி மாஸ் சதாகத் 75 ரன்களும், சல்மான் ஆகா 64 ரன்களும் எடுத்ததன் மூலம் 275 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. தொடர்ந்து ஆடிய வங்கதேச அணி 114 ரன்களுக்கு சுருண்டது. அந்த அணி தரப்பில் லிட்டன் தாஸ் அதிகபட்சமாக 41 ரன்கள் எடுத்தார்.

பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள் மாஸ் சதாகத் மற்றும் ஹாரிஸ் ரவுப் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். முடிவில் பாகிஸ்தான் 128 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, தொடரை 1-1 என சமன் செய்துள்ளது. மூன்று போட்டிகள் கொண்ட இந்த ஒருநாள் தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் 3வது ஒருநாள் போட்டி ஞாயிற்றுக்கிழமை டாக்காவில் நடைபெறுகிறது.
