மும்பை: சொந்த மண்ணில் விளையாடிய இந்திய அணி டெஸ்ட் தொடரில் இந்திய அணி 4,279 நாட்கள் வெற்றிகரமாக பயணித்து வருவது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமல்லாமல் கடந்த 36 ஆண்டுகளில் இந்திய அணி 3 டெஸ்ட் தொடரை மட்டுமே இழந்திருப்பது பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
வங்கதேசம் அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை பாகிஸ்தான் அணி 2-0 என்ற கணக்கில் தோல்வியை சந்தித்துள்ளது. 2வது டெஸ்ட் போட்டியில் வங்கதேசம் அணி வெற்றிபெற 185 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டது. இதனை வங்கதேசம் அணி 56 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்த நிலையில் எட்டி புதிய வரலாறு படைத்தது.

அதிலும் சீனியர் வீரர்களான ஷகிப் அல் ஹசன் மற்றும் முஷ்ஃபிகுர் ரஹிம் இருவரும் களத்தில் நின்று வென்று கொடுத்தது அந்த அணி ரசிகர்களுக்கு நெகிழ்ச்சியை கொடுத்தது. இதன் மூலமாக அந்நிய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்று வங்கதேசம் அணி புதிய வரலாற்றை உருவாக்கியுள்ளது. கடந்த போட்டியில் பாகிஸ்தானை முதல்முறையாக வீழ்த்திய வங்கதேசம், இந்த போட்டியில் வென்று முதல்முறையாக தொடரை கைப்பற்றியுள்ளது.
இதனால் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி பரிதாபமான நிலையில் இருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. அதுமட்டுமல்லாமல் ஹோம் சீசனில் 10 போட்டிகளில் விளையாடியுள்ள பாகிஸ்தான் அணி ஒரு போட்டியில் கூட வெற்றிபெறவில்லை. 10 போட்டிகளில் விளையாடி 6 தோல்வி, 4 டிரா என்பதே பாகிஸ்தானின் செயல்பாடாக உள்ளது.
கடைசியாக நட்சத்திர அணிகளில் நியூசிலாந்து அணி 1994 முதல் 1997 வரை தொடர்ச்சியாக 12 டெஸ்ட் போட்டிகளில் ஒரு வெற்றி கூட பெறாதது வரலாறாக உள்ளது. அந்த வரலாற்றை பாகிஸ்தான் அணி விரைவில் முறியடிக்கும் என்று ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். இந்த நிலையில் சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரை இழக்காமல் அதிக நாட்கள் தாக்கு பிடித்து வரும் அணிகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.
கடைசியாக இந்திய அணி 2012ஆம் ஆண்டு நடந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தோனி தலைமையில் தான் சொந்த மண்ணில் தோல்வியை சந்தித்தது. அதன்பின் 4,279 நாட்களாக இந்திய அணி சொந்த மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரில் கூட தோல்வியை சந்திக்கவில்லை. இந்த பட்டியலில் 2வது இடத்தில் தென்னாப்பிரிக்கா அணி உள்ளது.
அந்த அணி 1,682 நாட்களாக சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரை இழக்கவில்லை. 3வது இடத்தில் ஆஸ்திரேலியா அணி 1,324 நாட்களாக டெஸ்ட் தொடரை சொந்த மண்ணில் இழக்காமல் விளையாடி வருகிறது. கடைசியாக ஆஸ்திரேலியா அணி இந்திய அணியிடம் தான் டெஸ்ட் தொடரை சொந்த மண்ணில் இழந்தது.
அதேபோல் இங்கிலாந்து அணி 1,179 நாட்களாக சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரை இழக்காமல் விளையாடி வருகிறது. கடைசியாக நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி தோல்வியை சந்தித்திருந்தது. அதேபோல் கடந்த 36 ஆண்டுகளில் இந்திய அணி சொந்த மண்ணில் நடந்த டெஸ்ட் தொடரில் மூன்று முறை மட்டுமே தோல்வியடைந்துள்ளது.
மற்ற அணிகளை ஒப்பிடும் போது இங்கிலாந்து அணி கடந்த 15 ஆண்டுகளில் 3 முறை சொந்த மண்ணில் நடந்த டெஸ்ட் தொடரை இழந்திருக்கிறது. அதேபோல் ஆஸ்திரேலியா அணி 12 ஆண்டுகளில் 3 டெஸ்ட் தொடரையும், நியூசிலாந்து அணி 11 ஆண்டுகளில் 3 டெஸ்ட் தொடரையும், தென்னாப்பிரிக்கா அணி கடந்த 10 ஆண்டுகளில் 3 டெஸ்ட் தொடரையும் இழந்துள்ளது. இதனால் சொந்த மண்ணில் இந்திய அணியை வீழ்த்துவது அவ்வளவு எளிதல்ல என்று ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.