ராவல்பிண்டி: பாகிஸ்தான் அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் வங்கதேசம் அணி 26 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வந்தது. அப்போது களமிறங்கிய லிட்டன் தாஸ் 228 பந்துகளில் 4 சிக்ஸ், 8 பவுண்டரி உட்பட 138 ரன்களை விளாசி அணியை மீட்டெடுத்தார். லிட்டன் தாஸ் ஒற்றை ஆளாக போராடியது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
பாகிஸ்தான் - வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் வங்கதேசம் அபார வெற்றிபெற்ற நிலையில், இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றிபெற வேண்டிய கட்டாயத்துடன் களமிறங்கியது. முதல் நாள் ஆட்டம் மழை காரணமாக ரத்து செய்யப்பட்ட நிலையில், 2வது நாள் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 274 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாகியது.

அதிகபட்சமாக சயீம் அயூப் 58 ரன்களும், கேப்டன் ஷான் மசூத் 57 ரன்களும் சேர்த்தனர். பின்னர் 2வது நாள் ஆட்டத்தில் வங்கதேசம் அணி 6 ரன்களுடன் முடித்தது. இந்த நிலையில் 3வது நாள் ஆட்டத்தை வங்கதேச அணியின் ஷத்மன் இஸ்லாம் - ஜாகிர் ஹசன் இருவரும் தொடர்ந்தனர். இதில் பாகிஸ்தான் அணியின் குர்ரம் ஷேஷாத் பவுலிங்கில் ஹசன் 1 ரன்னில் ஆட்டமிழக்க, மற்றொரு தொடக்க வீரரான இஸ்லாம் 10 ரன்களில் வெளியேறினார்.
அந்த ஓவரிலேயே கேப்டன் ஷான்டோ 4 ரன்களிலும் வெளியேற, பின்னர் வந்த மோமினுல் 1, முஷ்ஃபிகுர் ரஹ்மான் 3 ரன்களிலும், ஷகிப் 2 ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால் வெறும் 26 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதன் காரணமாக வங்கதேச அணி 50 ரன்களுக்குள் ஆல் அவுட்டாகும் என்று பார்க்கப்பட்டது. ஆனால் களத்தில் லிட்டன் தாஸ் மற்றும் மெஹதி ஹசன் மிராஸ் இருவரும் இருந்தனர்.
இருவருமே நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்த வங்கதேசம் அணியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. இவர்களின் பார்ட்னர்ஷிப்பை உடைக்க முடியாமல் பாகிஸ்தான் பவுலர்கள் திணறினர். உணவு இடைவேளைக்கு பின்பும் பேட்டிங் தொடர, இருவரும் அரைசதத்தை கடந்தனர். இவர்களின் பார்ட்னர்ஷிப் 165 ரன்களாக உயர்ந்த நிலையில், குர்ரம் ஷேஷாத் பவுலிங்கில் மெஹதி ஹசன் மிராஸ் பவுலிங்கில் 78 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
இருப்பினும் ஹசன் மஹ்முத் உடன் பார்ட்னர்ஷிப் அமைத்த லிட்டன் தாஸ் வங்கதேச அணியின் ஸ்கோரை வேகமாக உயர்த்தினார். தொடர்ந்து 99 ரன்கள் எடுத்திருந்த நிலையில், பவுண்டரி அடித்து தனது 4வது சதத்தை எட்டினார். தொடர்ந்து பவுண்டரிகள், சிக்ஸ் மூலமாக லிட்டன் தாஸ் ரன்களை உயர்த்த தொடங்கினார். சிறப்பாக ஆடிய அவர், 228 பந்துகளில் 4 சிக்ஸ், 13 பவுண்டரி உட்பட 138 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இதன் காரணமாக வங்கதேச அணி 262 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாகியது. 12 ரன்கள் பின் தங்கியிருந்தாலும், வங்கதேசம் அணி மிகப்பெரிய போராட்டத்தை வெளிப்படுத்தியதாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக வங்கதேசம் அணியின் வரலாற்றில் லிட்டன் தாஸின் இன்னிங்ஸ் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்துள்ளது. வங்கதேச அணியின் போராட்டம் பல்வேறு அணிகளுக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.