PAK vs BAN: பாகிஸ்தானை ஜெயிக்க வைத்த 20 வயது வீரர்.. 128 ரன் வித்தியாசத்தில் தோற்ற வங்கதேசம்
டாக்கா: வங்கதேசத்துக்கு எதிரான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி 128 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரை 1-1 என்ற கணக்கில் பாகிஸ்தான் சமன் செய்துள்ளது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 47.3 ஓவர்களில் 274 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இந்தப் போட்டியில் 20 வயதான பாகிஸ்தான் வீரர் மாஸ் சதாகத் 46 பந்துகளில் 6 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களுடன் 75 ரன்களை விளாசி அதிரடியான தொடக்கத்தை அளித்தார். இவரும் சஹிப்ஸாதா ஃபர்ஹானும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 78 பந்துகளில் 103 ரன்கள் சேர்த்தனர். ஃபர்ஹான் 31 ரன்கள் எடுத்தார். இது மாஸ் சதாகத் ஆடும் 2வது சர்வதேச ஒருநாள் போட்டி ஆகும்.

பின்னர் வந்த சல்மான் ஆகா 64 ரன்களும், முகமது ரிஸ்வான் 44 ரன்களும் எடுத்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இவர்கள் இருவரும் இணைந்து 115 பந்துகளில் 109 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். மெஹிதி ஹசன் மிராஸ் செய்த சர்ச்சைக்குரிய ரன் அவுட் மூலம் சல்மான் ஆட்டமிழந்தார். இதையடுத்து பாகிஸ்தான் அணி தனது கடைசி 7 விக்கெட்டுகளை வெறும் 43 ரன்களுக்கு இழந்தது. வங்கதேச தரப்பில் ரிஷாத் ஹொசைன் 3 விக்கெட்டுகளையும், மெஹிதி ஹசன் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
பின்னர் மழை குறுக்கிட்டதால், டக்வொர்த் லீவிஸ் முறைப்படி வங்கதேச அணிக்கு 32 ஓவர்களில் 243 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. சேஸிங்கை தொடங்கிய வங்கதேசம் ஷாஹீன் அப்ரிடி மற்றும் முகமது வாசிம் ஆகியோரின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 4.3 ஓவர்களில் 15 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தவித்தது. பின்னர் லிட்டன் தாஸ் 41 ரன்களும், தவ்ஹித் ஹிரிடோய் 28 ரன்களும் எடுத்து அணியை சரிவில் இருந்து மீட்கப் போராடினர்.
ஆனால், பேட்டிங்கில் மிரட்டிய மாஸ் சதாகத் பந்துவீச்சிலும் திறமையை காட்டினார். அவர் 5 ஓவர்கள் வீசி 23 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து முக்கிய 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். கேப்டன் ஷாஹீன் அப்ரிடி 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இறுதியில் வங்கதேச அணி 23.3 ஓவர்களில் வெறும் 114 ரன்களுக்கு சுருண்டது. பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் அசத்திய மாஸ் சதாகத் பாகிஸ்தானின் அபார வெற்றிக்கு வித்திட்டார்.


Click it and Unblock the Notifications