PAK vs BAN: ரிஸ்வான் டபுள் செஞ்சுரி அடிக்கலையா.. ஒரு மணி நேரம் முன்னாடியே சொல்லிட்டோம்.. விளக்கம்
ராவல்பிண்டி: வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் பேட்ஸ்மேன் முகமது ரிஸ்வான் இரட்டை சதம் அடிக்கும் முன்பு பாகிஸ்தான் கேப்டன் ஷான் மசூத் முதல் இன்னிங்ஸை டிக்ளர் செய்தது சர்ச்சையாக மாறி உள்ளது. அது குறித்து விளக்கம் அளித்த துணை கேப்டன் சவுது ஷகீல் ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவே முகமது ரிஸ்வானிடம் நாங்கள் இது குறித்து கூறி விட்டோம் என விளக்கம் அளித்து இருக்கிறார்.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 16 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்து மோசமான நிலையில் இருந்தது. துவக்க வீரர் சயிம் அயூப் 56 ரன்கள் எடுத்தார். மற்றொரு துவக்க வீரர் அப்துல்லா ஷபிக் இரண்டு ரன்களும், கேப்டன் ஷான் மசூத் 6 ரன்களும், பாபர் அசாம் டக் அவுட்டும் ஆனார்கள்.

அதன் பின்பு ஐந்தாவது வரிசையில் வந்த சவுது ஷகீல் மற்றும் ஆறாவது வரிசையில் இறங்கிய முகமது ரிஸ்வான் இணைந்து அணியை மீட்டனர். சவுது ஷகீல் 261 பந்துகளில் 141 ரன்கள் எடுத்தார். முகமது ரிஸ்வான் 239 பந்துகளில் 171 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். பாகிஸ்தான அணி 448 ரன்கள் எடுத்து 6 விக்கெட்களை இழந்திருந்த நிலையில் கேப்டன் ஷான் மசூத் டிக்ளர் செய்வதாக அறிவித்தார்.
அப்போது முகமது ரிஸ்வான் கூடுதலாக 29 ரன்கள் சேர்த்திருந்தால் இரட்டை சதம் அடித்து இருப்பார். அதற்கான வாய்ப்பை அளிக்காமல் விரைவாக டிக்ளர் செய்ததாக ரசிகர்கள் விமர்சனம் செய்தனர். டெஸ்ட் போட்டிகளில் எளிதாக பேட்டிங் செய்யக்கூடிய சூழ்நிலையில் பாகிஸ்தான் அணி 500 ரன்கள் எடுத்த பின்னரே டிக்ளர் செய்து இருக்க வேண்டும் என்ற விமர்சனமும் எழுந்தது.
இந்த நிலையில் இந்த போட்டியில் 141 ரன்கள் எடுத்த துணை கேப்டன் சவுது ஷகீல் இரட்டை சத சர்ச்சை குறித்து விளக்கம் அளித்துள்ளார். "ரிஸ்வான் இரட்டை சதத்தை பொருத்தவரை நாங்கள் விரைவாக அந்த முடிவை எடுக்கவில்லை. ஒரு மணி நேரத்துக்கு முன்பு நாங்கள் எப்போது டிக்ளர் செய்வோம் என்பதை முகமது ரிஸ்வானிடம் கூறிவிட்டோம். அவருக்கு நிச்சயம் நாங்கள் எப்போது டிக்ளர் செய்வோம் என்பது தெரிந்து இருந்தது. நாங்கள் 450 ரன்களை நெருங்கும்போது டிக்ளேர் செய்வோம் என அவரிடம் சொல்லி இருந்தோம்." என்றார் ஷகீல்.


Click it and Unblock the Notifications