PAK vs BAN: ரிஸ்வான் செய்த காரியம்.. பேட்டை தூக்கி எறிந்து.. அரண்டு போன பாகிஸ்தான் கேப்டன்
ராவல்பிண்டி: பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகள் ஆடி வரும் முதல் டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்ட பாகிஸ்தான் வீரார் முகமது ரிஸ்வான் பேட்டை தூக்கி பாபர் அசாம்-இடம் வீசினார். அதைப் பார்த்த பலரும் பதறிப் போனார்கள். ரிஸ்வான் கோபத்தில் இருக்கிறாரோ என்று நினைத்து ஒரு நிமிடம் திகைத்து நின்றார் பாகிஸ்தான் கேப்டன் ஷான் மசூத். ஆனால். நடந்தது வேறு.
வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. பாகிஸ்தான் டெஸ்ட் அணியின் கேப்டன் ஷான் மசூத் 6 ரன்களும், முன்னணி பேட்ஸ்மேன் பாபர் அசாம் டக் அவுட்டும் ஆனார்கள். துவக்க வீரர் அப்துல்லா ஷபிக் 2 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டம் இழந்தார்.

பாகிஸ்தான் அணி ஒரு கட்டத்தில் 114 ரன்கள் எடுத்து 4 விக்கெட்களை இழந்து இருந்தது. முகமது ரிஸ்வான் இணைந்து 240 ரன்களுக்கு கூட்டணி அமைத்தனர். சவுது ஷகீல் 141 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். முகமது ரிஸ்வான் அபாரமாக ஆடி 171 ரன்கள் எடுத்து இருந்தார். அப்போது பாகிஸ்தான் அணியின் கேப்டன் ஷான் மசூத் முதல் இன்னிங்ஸ்-ஐ டிக்ளர் செய்வதாக அறிவித்தார்.
பாகிஸ்தான் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 448 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ரிஸ்வான் இரட்டை சத வாய்ப்பை பறிக்கும் வகையில் அவர் டிக்ளர் செய்தது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. முகமது ரிஸ்வான் இதனால் கோபத்தில் இருப்பார் என்றே பலரும் எண்ணினர். டிக்ளர் செய்த உடன் வேகமாக ஆடுகளத்தை விட்டு வெளியேறிய அவர், தன்னை வரவேற்ற பாபர் அசாம் மீது தனது பேட்டை தூக்கி வீசினார்.
அதைப் பார்த்த பலரும் ரிஸ்வான் கோபத்தில் தான் இப்படி செய்கிறார் என நினைத்தனர். தற்போது இந்த சம்பவம் குறித்து அருகில் இருந்து எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. ரிஸ்வான் நட்பு அடிப்படையில் பாபர் அசாம்-இடம் பேட்டை வீசி இருந்தது அதில் தெரிந்தது. இன்னும் 29 ரன்கள் எடுத்திருந்தால் முகமது ரிஸ்வான் இரட்டை சதம் அடித்திருப்பார்.
அந்த வாய்ப்பை ஷான் மசூத் வேண்டும் என்றே பறித்து விட்டார் என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். மேலும், முதல் இன்னிங்க்ஸில் வங்கதேசம் 5 விக்கெட் இழப்பிற்கு 316 ரன்கள் எடுத்துள்ளது. இந்த நிலையில், பாகிஸ்தான் அணி அவசரப்பட்டு குறைவான ரன்கள் சேர்த்த நிலையிலேயே டிக்ளர் செய்து விட்டதாகவும் ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications