ராவல்பிண்டி: பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் வங்கதேச அணிக்கு வெற்றி தேடித் தந்த அந்த அணியின் மூத்த வீரர் முஷ்பிகுர் ரஹீம் இந்த போட்டிக்கு பின் நெகிழ வைக்கும் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.
வங்கதேச நாட்டில் கடந்த இரண்டு மாதங்களாக கலவரங்கள் நடந்து முடிந்த நிலையில், தற்போது அங்கு கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதனால், பல ஆயிரம் மக்கள் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து தவித்து வருகின்றனர். இந்த நிலையில், முதல் டெஸ்டில் ஆட்டநாயகன் விருது வென்ற முஷ்பிகுர் ரஹீம் தனது பரிசுப் பணத்தை வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிப்பதாக அறிவித்தார். இதை அடுத்து கிரிக்கெட் ரசிகர்கள் அவரை பாராட்டி வருகின்றனர்.

பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணி முதல் இன்னிங்ஸ் பேட்டிங்கில் அபாரமாக செயல்பட்டது. பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்து 6 விக்கெட் இழப்பிற்கு 448 ரன்கள் எடுத்து டிக்ளர் செய்தது. அடுத்து முதல் இன்னிங்ஸ் பேட்டிங் ஆடிய வங்கதேச அணி 565 ரன்கள் குவித்தது. முஷ்பிகுர் ரஹீம் 191 ரன்கள் குவித்து அசத்தி இருந்தார். அவர் 9 ரன்களில் இரட்டை சதத்தை தவற விட்ட போதும் அணியின் ஸ்கோர் 500 ரன்களை தாண்ட முக்கிய காரணமாக இருந்தார்.
முஷ்பிகுர் ரஹீமின் அபார ஆட்டத்தால் வங்கதேசம் முதல் இன்னிங்ஸில் 117 ரன்கள் முன்னிலை பெற்றது. அடுத்து ஆடிய பாகிஸ்தான் அணி கடைசி நாள் ஆட்டத்தில் 146 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதை அடுத்து 30 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கிய வங்கதேசம் 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
191 ரன்கள் குவித்த முஷ்பிகுர் ரஹீம் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். அப்போது பேசிய அவர் கடந்த இரண்டரை மாதங்களாக தான் தீவிர பயிற்சியில் ஈடுபட்டதாகவும், அதற்கு உதவிய வங்கதேச கிரிக்கெட் அமைப்புக்கும், பயிற்சியாளர்களுக்கும் நன்றி கூறினார். அதன் பின்னர் தனக்கு கிடைத்த பரிசுப் பணத்தை வங்கதேச வெள்ளப்பெருக்கில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிப்பதாக தெரிவித்தார்.