ஜஸ்ட் மிஸ்.. 9 ரன்களில் இரட்டை சதத்தை தவறவிட்ட வங்கதேச வீரர்.. பாகிஸ்தானை பதறவைத்த நாகினிஸ்!
ராவல்பிண்டி: பாகிஸ்தான் - வங்கதேசம் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 448 ரன்கள் எடுத்திருந்த போது டிக்ளேர் செய்தது. பாகிஸ்தான் அணியின் விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வாம் 171 ரன்களும், சாவுட் சக்கீல் 141 ரன்களும் விளாசினர்.
இதன்பின் களமிறங்கிய வங்கதேச அணி 3வது நாள் ஆட்ட நேரம் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 316 ரன்களை குவித்திருந்தது. அந்த அணியின் சீனியர் வீரரான முஷ்ஃபிகுர் ரஹிம் 55 ரன்களுடனும், லிட்டன் தாஸ் 52 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இந்த நிலையில் 4வது நாள் ஆட்டத்தில் பாகிஸ்தான் அனி வங்கதேச அணியை விரைவாக ஆல் அவுட் செய்ய வேண்டிய கட்டாயத்துடன் களமிறங்கியது.

4வது நாள் ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே லிட்டன் தாஸ் 56 ரன்களில் ஆட்டமிழக்க, பின்னர் மெஹதி ஹசன் மிராஸ் - ரஹிம் கூட்டணி இணைந்து பாகிஸ்தான் பவுலிங்கை பதம் பார்த்தது. சிறப்பாக ஆடிய ரஹிம் தனது சதத்தை எட்ட, பாகிஸ்தான் வீரர்கள் விக்கெட் வீழ்த்த வேண்டிய வேகத்தில் என்ன செய்வதென புரியாமல் சொதப்பினர்.
இதனை பயன்படுத்தி கொண்ட முஷ்ஃபிகுர் ரஹிம் விரைவாக பவுண்டரிகள் மூலமாக ரன்களை சேர்க்க தொடங்கினார். ஒரு கட்டத்தில் வங்கதேச அணி முன்னிலை பெற தொடங்கிய போது, ஆட்டம் கிட்டத்தட்ட டிராவை நோக்கி நகர்வதாக பார்க்கப்பட்டது. இருந்தாலும் முஷ்ஃபிகுர் ரஹிம் ரன் குவிப்பை தீவிரப்படுத்தினார். சிறப்பாக ஆடிய அவர் இரட்டை சதம் விளாசுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
191 ரன்கள் எடுத்திருந்த போது முகமது அலி வீசிய பந்தை கட் ஷாட் அடிக்க முயன்று ரிஸ்வானிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இதன் காரணமாக 341 பந்துகளில் 22 பவுண்டரி, ஒரு சிக்ஸ் உட்பட 191 ரன்கள் எடுத்து முஷ்ஃபிகுர் ரஹிம் வெளியேறினார். அவருக்கு ஓய்வறையில் இருந்த வீரர்கள் அனைவரும் எழுந்து நின்று வரவேற்பு அளித்தனர். வங்கதேச அணியின் முன்னிலை 100 ரன்களை கடந்துள்ளது.
ஏற்கனவே முதல் இன்னிங்ஸின் போது பாகிஸ்தான் அணியின் ரிஸ்வான் இரட்டை சதம் அடிக்கும் வாய்ப்பை அந்த அணி நிர்வாகமே தடுத்து நிறுத்தியது. தற்போது முஷ்ஃபிகுர் ரஹிம் 9 ரன்களில் இரட்டை சதத்தை மிஸ் செய்துள்ளார். இதனால் ராவல்பிண்டி பிட்ச் நல்ல தார் ரோடு போல் இருப்பதாக ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications