ராவல்பிண்டி: வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணியின் முன்னணி பேட்ஸ்மேன் பாபர் அசாம் இரண்டு பந்துகளை மட்டுமே சந்தித்து விக்கெட் கீப்பர் லிட்டன் தாசிடம் கேட்ச் கொடுத்து டக் அவுட் ஆகி இருந்தார். அதற்கு காரணமே அவரது சோம்பேறித்தனம் தான் என முன்னாள் பாகிஸ்தான் வீரர் பாஸித் அலி குற்றச்சாட்டை முன் வைத்து அதிர வைத்து இருக்கிறார்.
வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி 448 ரன்கள் குவித்ததால் டக் அவுட் ஆன பாபர் அசாம் கடும் விமர்சனத்தில் இருந்து தப்பினார். முகமது ரிஸ்வான் 171 ரன்கள் எடுத்தும், சவுது ஷகீல் 141 ரன்கள் எடுத்தும் பாகிஸ்தான் அணி பெரிய ஸ்கோர் எட்ட உதவினர்.

இந்த நிலையில், பாகிஸ்தான் அணியின் சிறந்த பேட்ஸ்மேன் பாபர் அசாம் குறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் பாஸித் அலி பேசுகையில், வலைப் பயிற்சியில் பாபரின் சோம்பேறித்தனமே அவரது விக்கெட் வீழ்ச்சிக்கு முக்கிய காரணம் என சுட்டிக்காட்டி இருக்கிறார். பாகிஸ்தான் அணி வீரர்கள் வலைப் பயிற்சியில் ஈடுபடும்போது ஒரு பேட்ஸ்மேன் பந்தை தவறவிட்டால் அல்லது தடுத்து ஆடினால் அவரே அந்த பந்தை எடுத்து பந்து வீச்சாளரிடம் வீச வேண்டும் என்ற நிலை உள்ளது.
மாறாக வேகமாக ஒரு ஷாட் எடுத்தால் பந்து சில அடி தூரம் அல்லது நீண்ட தூரம் தாண்டி செல்லும். அப்போது வேறு வீரர்கள் பந்தை எடுத்து பந்து வீச்சாளரிடம் கொடுப்பார்கள். பந்தை எடுத்துப் போடுவதில் ஏற்பட்ட சோம்பேறித்தனத்தால் வலை பயிற்சியில் பாபர் அசாம் ஒவ்வொரு பந்தையும் அடித்து ஆட வேண்டும் என்ற மனநிலைக்கு சென்றுவிட்டார் என பாஸித் அலி சுட்டிக்காட்டி இருக்கிறார்.
கீழே குனிந்து பந்தை எடுத்துப் போட முடியாமல், ஒவ்வொரு பந்தையும் அடித்து ஆட வேண்டும் என்ற மனநிலைக்கு அவர் சென்று விட்டதாகவும், அந்தப் பழக்கத்தாலேயே போட்டிகளிலும் அவர் வந்தவுடன் முதல் பந்தில் இருந்து அடித்து ஆட வேண்டும் என நினைத்து கேட்ச் கொடுத்து ஆட்டம் இழக்கிறார் எனவும் பாஸித் அலி கூறி இருக்கிறார். பாபர் அசாம் இந்த அளவுக்கு சோம்பேறித்தனம் கொண்டவரா? அல்லது பாஸித் அலி பாபர் அசாம் மீது குற்றம் சுமத்த வேண்டும் என்பதற்காக இவ்வாறு கூறியிருக்கிறாரா? என்ற கேள்விகள் எழுந்துள்ளன.