மும்பை : வங்கதேசத்துக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பாகிஸ்தான் அணி தங்களது சொந்த மண்ணிலே தோல்வியை தழுவி ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது. இதனால் பாகிஸ்தான் அணியில் வீரர்களுக்கு இடையே ஒற்றுமை இருக்கிறதா என்று கேள்வி எழுந்துள்ளது.
மேலும் கேப்டன்சி விவகாரம் காரணமாக அந்த அணிக்குள் வீரர்கள் மத்தியில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருப்பதாகவும் செய்திகள் உலா வருகின்றன. வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் கூட ஷாஹீன் அப்ரிடி மேல் கேப்டன் ஷான் மசூத் கையை போடும்போது அதை அவர் விலக்கி விட்டார்.

இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இந்த வீடியோ குறித்து ஷான் மசூத் விளக்கம் அளித்து இருக்கிறார். அதை பற்றி பேசிய அவர், நான் ஷாகின் அப்ரிடி தோள் மீது கை போட்டது உண்மைதான். அதை அவர் எடுத்து விட்டதும் உண்மைதான். ஆனால் அவர் என் மீது கோபமாக இதை செய்யவில்லை. அவருக்கு தோள்பட்டையில் காயம் இருந்தது.
இதனால் கையை அங்கே வைக்காதே என்று தான் அவர் கையை எடுத்து விட்டார். இதில் எந்த ஒரு குழப்பமும் வேண்டாம். அதே சமயம் நாட்டு மக்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கின்றேன். எங்களுடைய அனைவரின் நோக்கமும், பாகிஸ்தான் கிரிக்கெட் அணி மென்மேலும் உயர வேண்டும் என்பது மட்டும்தான். அதற்காக தான் நாங்கள் உழைத்துக் கொண்டு இருக்கிறோம்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் பல அனுபவம் வாய்ந்த வீரர்கள் தேவை. தேர்வு குழுவினருக்கு நான் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அதே சமயம் இன்னும் கனிவோடு அவர்கள் திறமை வாய்ந்த பல வீரர்களை தேர்வு செய்ய வேண்டும். எங்கள் அணி வீரர்கள் செய்த தவறுகள் குறித்து நாங்கள் நிச்சயம் ஆராய்வோம். நாங்கள் இந்த தொடரில் பல தவறுகளை செய்திருக்கிறோம்.
டெஸ்ட் கிரிக்கெட் என்பது உடல் தகுதி இருந்தால் மட்டுமே விளையாட முடியும். எங்கள் வீரரின் உடல் தகுதி குறித்து நாங்கள் நிச்சயம் கண்காணித்து, எப்படி சரி செய்ய முடியும் என்பதை யோசிப்போம். அதிக டி20 போட்டிகளை தற்போது நாங்கள் விளையாடுகிறோம். டி-20 போட்டியில் விளையாடியவர்களை டெஸ்ட் கிரிக்கெட்டில் சேர்த்து ஆடுங்கள் என்று கூற முடியாது. நமது பள்ளி கல்லூரிகளில் கணக்கு பாடத்தை படித்தால் கணக்கு பரிட்சைக்கு தான் எழுத முடியும்.
ஆனால் இங்கு அறிவியல் படித்துவிட்டு கணக்கு எழுதுங்கள் என்று சொல்வது போல் இருக்கிறது. அதே மாதிரி தான் டெஸ்ட் கிரிக்கெட் விளையாட வேண்டும் என்றால் வீரர்கள் அதிக அளவு டெஸ்ட் கிரிக்கெட் உள்ளூர் போட்டிகளில் விளையாடி இருக்க வேண்டும். இதனால் இனி யார் யார் எல்லாம் அதிகமாக டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறார்களோ, அவர்களுக்கே பிளேயிங் லெவனில் முன்னுரிமை வழங்க வேண்டும் என்று ஷான் மசூத் கூறியுள்ளார்.