ராவல்பிண்டி: வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி ஆடி வருகிறது. இந்தப் போட்டியின் இடையே பாகிஸ்தான் கேப்டன் ஷான் மசூத் மற்றும் பயிற்சியாளர் ஜேசன் கில்லெஸ்பிக்கு இடையே வாக்குவாதம் நடந்த வீடியோ வெளியாகி உள்ளது. இந்த டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான அணி முழு நேர சுழற் வந்து வீச்சாளர்கள் யாரும் இல்லாமல் களம் இறங்கியது.
அந்த முடிவு சர்ச்சையான நிலையில் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்க்ஸில் 6 விக்கெட் இழப்பிற்கு 448 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளர் செய்தது. இந்த போட்டி நடந்த ராவல்பிண்டி பிட்ச் பேட்டிங் செய்ய சாதகமாக இருந்த சூழ்நிலையில் 448 ரன்கள் போதுமா? என்ற கேள்வி எழுந்தது.

எதிர்பார்த்தது போலவே வங்கதேசம் தனது முதல் இன்னிங்க்ஸில் 565 ரன்கள் எடுத்து, பாகிஸ்தான் அணியை விட கூடுதலாக 117 ரன்கள் எடுத்து முன்னிலை பெற்றது. வங்கதேசம் பேட்டிங் செய்து கொண்டிருந்த போது பாகிஸ்தான் அணியால் விக்கெட் வீழ்த்த முடியவில்லை. நான்கு வேகப் பந்துவீச்சாளர்களோடு ஆடிய பாகிஸ்தான் அணியால் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த முடியவில்லை.
இந்த நிலையில், போட்டி முடிந்து ஆடுகளத்தை விட்டு வெளியேறிய பாகிஸ்தான் அணியின் கேப்டன் ஷான் மசூத் நேராக பாகிஸ்தான் வீரர்கள் அறைக்கு சென்றார். அங்கு நின்று இருந்த புதிய பயிற்சியாளர் ஜேசன் கில்லெஸ்பியுடன் அவர் வாக்குவாதம் செய்தார். யாரோ ஒரு பாகிஸ்தான் வீரரை குறித்து கையை நீட்டி சத்தமாக கத்தினார்.
ஆனால், ஜேசன் கில்லெஸ்பி ஒரு வார்த்தை கூட பேசவில்லை. ஷான் மசூத் நடந்த கொண்ட விதத்தால் அவர் அதிருப்தி அடைந்தார். பின்னர் ஷான் மசூத்தை உள்ளே அழைத்துச் சென்றார். கில்லெஸ்பி எடுத்த முடிவு குறித்துதான் பாகிஸ்தான் கேப்டன் ஷான் மசூத் இவ்வாறு வாக்குவாதம் செய்து இருப்பதாக சமூக வலைதளங்களில் கருத்துக்கள் பரவி வருகின்றன. இந்த சம்பவத்தால் பாகிஸ்தான் வீரர்கள் அறையில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
பாபர் அசாம் ஒரு கேட்ச்சை நழுவ விட்டார். அது குறித்துதான் ஷான் மசூத் கோபத்தில் இருந்தார் எனவும் சிலர் சுட்டிக் காட்டி வருகின்றனர். முதல் டெஸ்ட் போட்டியில் இன்னும் ஒரு நாள் மட்டுமே மீதம் உள்ள நிலையில் பாகிஸ்தான் அணி நான்காம் நாள் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 23 ரன்கள் எடுத்துள்ளது. இந்த போட்டி டிராவில் முடியும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.