PAK vs BAN: பாகிஸ்தான் ஜெய்ஸ்வாலுக்கு கிடைத்த அடி.. ஒரே டக் அவுட்டால் பேட்டிங் ஆவரேஜ் சரிவு
ராவல்பிண்டி: டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக பேட்டிங் சராசரி வைத்துள்ள வீரர்களில் ஆஸ்திரேலிய ஜாம்பவான் டான் பிராட்மேனுக்கு அடுத்த இடத்தில் ஜெய்ஸ்வால் இருக்கிறார். பாகிஸ்தான் அணியின் சவுது ஷகீல் அவரை நெருங்கி மூன்றாவது இடத்தில் இருந்தார். இதை அடுத்து பாகிஸ்தான் அணியின் ஜெய்ஸ்வால் என சவுது ஷகீலை குறிப்பிட்டு இருவரையும் ஒப்பிட்டு வந்தனர் ரசிகர்கள்.
இந்திய அணியின் துவக்க வீரர் ஜெய்ஸ்வாலின் டெஸ்ட் பேட்டிங் சராசரி 68.5 ஆக உள்ளது. அவர் 9 டெஸ்ட் போட்டிகளில் 16 இன்னிங்ஸ்களில் பேட்டிங் செய்து 1028 ரன்கள் சேர்த்து இருக்கிறார். மறுபுறம் சவுது ஷகீல் 20 இன்னிங்ஸ்களில் 1108 ரன்கள் எடுத்திருந்தார். அவரது பேட்டிங் சராசரி 65 ஆக இருந்தது.

இந்த நிலையில், வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் முதல் இன்னிங்ஸில் சதம் அடித்து 141 ரன்கள் எடுத்து இருந்த சவுது ஷகீல் இரண்டாவது இன்னிங்க்ஸில் மேலும் ரன் குவித்து ஜெய்ஸ்வாலின் பேட்டிங் சராசரியை முந்துவார் என பாகிஸ்தான் ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், இரண்டாவது இன்னிங்க்ஸில் பந்துகளை சந்தித்து டக் அவுட் ஆனார் ஷகீல். இதை அடுத்து அவரது பேட்டிங் சராசரி வெகுவாக சரிந்துள்ளது.
தற்போது அவரது பேட்டிங் சராசரி 61 ஆக உள்ளது. அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக பேட்டிங் சராசரி வைத்துள்ள வீரர்களின் வரிசையில் நான்காவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். ஜெய்ஸ்வால் தொடர்ந்து இரண்டாவது இடத்தில் நீடிக்கிறார்.
வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 448 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளர் செய்திருந்தது. அடுத்து ஆடிய வங்கதேச அணி 565 ரன்கள் எடுத்தது. ஐந்தாம் நாள் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி தனது இரண்டாவது இன்னிங்க்ஸில் தடுமாறத் தொடங்கியது. 32 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 103 ரன்கள் எடுத்துள்ளது. இதை அடுத்து பாகிஸ்தான் அணி தோல்வியை தவிர்க்க போராட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications