லாகூர்: பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வங்கதேச அணிக்கு எதிராக டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. அந்த டெஸ்ட் தொடருக்கு தேர்வு செய்யப்பட்டிருந்த லெக் ஸ்பின்னர் ஆப்ரார் அகமதை திடீரென அணியில் இருந்து நீக்கி இருக்கிறது அணி நிர்வாகம். இதன் காரணமாக பாகிஸ்தான் அணி ஒரு முழு நேர ஸ்பின்னர் கூட இல்லாமல் வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது.
இந்த முடிவு முட்டாள்தனமானது என முன்னாள் பாகிஸ்தான் வீரர்கள் பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில், முன்னாள் வீரர் கம்ரான் அக்மல் ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணியை உதாரணம் காட்டி பாகிஸ்தான் அணி நிர்வாகம் எடுத்த முடிவை விமர்சித்து இருக்கிறார்.

அஸ்வின் அல்லது ஜடேஜா இல்லாமல் இந்திய டெஸ்ட் அணி விளையாடுமா? என கேள்வி எழுப்பி இருக்கிறார். மேலும், இளம் வீரரான ஆப்ரார் அகமதின் தன்னம்பிக்கையை உடைக்கும் வேலையைத்தான் பாகிஸ்தான் அணி செய்து வருவதாகவும் அவர் விளாசி இருக்கிறார். பாகிஸ்தான் டெஸ்ட அணியின் பயிற்சியாளர் ஜேஸன் கில்லஸ்பி தனது ஆஸ்திரேலிய மனநிலையை வெளிப்படுத்தி இருப்பதாகவும் அவர் கூறி இருக்கிறார்.
"ஜேசன் கில்லஸ்பி பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளராக இருக்கும் நிலையில் நாம் ஆஸ்திரேலிய மனநிலையை பற்றி பேச வேண்டி உள்ளது. ஆனால், ஆஸ்திரேலிய அணி நாதன் லியோன் இல்லாமல் டெஸ்ட் போட்டியில் விளையாடுமா? அஸ்வின் அல்லது ரவீந்திர ஜடேஜா இல்லாமல் இந்திய அணி டெஸ்ட் போட்டியில் விளையாடுமா? நிச்சயமாக இல்லை. நமது பாகிஸ்தான் அணியில் ஆப்ரார் அகமது ஸ்பின்னராக இடம் பெற்று இருந்தார். ஆனால், இப்போது அவரை நீக்கியதன் மூலம் அவரது தன்னம்பிக்கையை வெகுவாக உடைத்து இருக்கிறீர்கள்." என்றார் கம்ரான் அக்மல்.
மேலும், "தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளின் காரணமாக ஆப்ரார் அகமதின் கிரிக்கெட் வாழ்க்கை பாழாக்கப்பட்டு இருக்கிறது. அவரது உடற் தகுதி மற்றும் ஆடுகளத்துக்கு வெளியே நடந்து கொள்ளும் விதம் ஆகியவற்றை சுட்டிக்காட்டி, அதன் காரணமாக அவர் நீக்கப்பட்டு இருப்பதாக சொல்கிறார்கள். ஆனால், நீங்கள் அந்த பையனின் வாழ்க்கையை வீணடித்து விட்டீர்கள். பாகிஸ்தான் அணியையும் பாதிப்புக்கு உள்ளாக்கி இருக்கிறீர்கள்." இவ்வாறு கம்ரான் அக்மல் விமர்சித்து இருக்கிறார்.