டி20 உலககோப்பை- முதல் வெற்றியை பெற்றது பாகிஸ்தான்.. கனடாவுக்கு எதிராக தப்பித்த பாபர் அசாம் படை
மும்பை : டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் குரூப் ஏ பிரிவில் கனடா அணியை எதிர்கொண்ட பாகிஸ்தான் ஏழு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இரண்டு புள்ளிகளை பெற்றது. பாகிஸ்தான் அணி நடப்பு உலககோப்பை தொடரில் விளையாடிய இரண்டு போட்டிகளில் தோல்வியை தழுவியது.
இந்த நிலையில் கனடாவுக்கு எதிராக வாழ்வா சாவா ஆட்டத்தில் களமிறங்கியது. இதில் பாகிஸ்தான் அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை அடுத்து களமிறங்கிய கனடா அணியில் தொடக்க வீரர் ஆரோன் ஜான்சன் அபாரமாக விளையாடி 44 பந்துகளில் 52 ரன்கள் சேர்த்தார். இதில் நான்கு பவுண்டரி, நான்கு சிக்சர்கள் அடங்கும்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய வீரர் நவநீத் தலிவால், பரகத்சிங் ஆகியோர் சொற்ப ரன்களில் வெளியேறினர். அந்த அணியின் நட்சத்திர வீரரான நிக்கோலஸ் கிரிட்டன் ஒரு ரன் மட்டுமே எடுத்திருந்தார். இதனால் கனடா அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 106 ரன்கள் எடுத்தது. பாகிஸ்தான் பந்துவீச்சு தரப்பில் முகமது அமீர், ஹரிஷ் ரவுப் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதன் அடுத்து 107 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி களம் இறங்கியது.இந்த இலக்கை விரைவில் எட்டினால் பாகிஸ்தான் அணியின் ரன் ரேட் உயரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கனடா அணி வீரர்கள் கட்டுக்கோப்பாக பந்து வீசி பாகிஸ்தானுக்கு நெருக்கடியை கொடுத்தனர். தொடக்க வீரர் சயிம் அயூப் 6 ரன்களில் வெளியேற இரண்டாவது விக்கெட்டுக்கு முகமது ரிஸ்வான் பாபர் அசாம் ஜோடி சேர்ந்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
இந்த ஜோடி இரண்டாவது விக்கெட்டுக்கு 63 ரன்கள் சேர்த்தது.
பொறுப்புடன் விளையாடிய பாபர் அசாம் 33 பந்துகளில் 33 ரன்கள் சேர்த்து ஒரு நாள் கிரிக்கெட்டில் விளையாடுவது போல் ரன்களை சேர்த்து ஆட்டம் இழந்தார் . பக்கர் சமான் நான்கு ரன்கள் எடுக்க ரிஸ்வாம் மட்டும் தனி ஆளாக போராடி 53 பந்துகளில் 53 ரன்கள் சேர்த்தார்.
இதன் அடுத்து பாகிஸ்தான் அணி 17.3 ஓவரில் மூன்று விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றி இலக்கை எட்டியது. இதன் மூலம் நடப்பு உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி முதல் வெற்றியை பதிவு செய்தது. எனினும் பாகிஸ்தான் அணி அதிக ஓவர்களை இந்த இலக்கை தொடர் எடுத்துக் கொண்டது. இதனால் பாகிஸ்தான் அணி ரன் ரேட் 0.19 என்ற அளவில் தான் இருக்கின்றது. இது அமெரிக்க அணி ரன் ரேட் குறைவானதாகும்.


Click it and Unblock the Notifications