PAK vs ENG: பாகிஸ்தான் அபார பந்துவீச்சு.. 9 விக்கெட்டுகளை இழந்த இங்கிலாந்து
லண்டன்: பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில், இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட் இழப்பிற்கு 248 ரன்கள் எடுத்திருந்தபோது போதிய வெளிச்சமின்மை காரணமாக ஆட்டம் முன்கூட்டியே முடிவுக்கு வந்தது.
லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. மேகமூட்டமான வானிலை மற்றும் ஆடுகளத்தின் தன்மையைப் பயன்படுத்தி பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள் ஆரம்பம் முதலே இங்கிலாந்து பேட்டர்களுக்கு கடும் நெருக்கடி கொடுத்தனர்.

குறிப்பாக, அனுபவ வேகப்பந்து வீச்சாளர் முகமது அப்பாஸ் வீசிய 16 பந்துகளில் வெறும் 4 ரன்களுக்கு 3 விக்கெட்டுகள் சரிந்தன. இதில் இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் ஜோ ரூட் 4 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் இங்கிலாந்து அணி 36 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்பட்ட இங்கிலாந்து அணியை ஜேமி ஸ்மித் மற்றும் ஜோர்டான் காக்ஸ் ஜோடி மீட்டெடுத்தது. ஆரம்ப கட்ட அதிர்ச்சியில் இருந்து மீண்ட இந்த ஜோடி பொறுப்புடன் விளையாடி ரன்களை உயர்த்தியது. அபாரமாக விளையாடிய ஜேமி ஸ்மித் 61 ரன்களும், மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜோர்டான் காக்ஸ் 55 ரன்களும் எடுத்து அரைசதம் கடந்தனர்.
உணவு இடைவேளையின் போது 80 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்திருந்த இங்கிலாந்து அணி, தேநீர் இடைவேளையின் போது 5 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்கள் என்ற வலுவான நிலையை எட்டியது.இங்கிலாந்து அணி சரிவிலிருந்து மீண்டு பெரிய ஸ்கோரை நோக்கிச் சென்ற வேளையில், பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள் ஆட்டத்தின் கடைசி பகுதியில் மீண்டும் ஆதிக்கம் செலுத்தினர்.
வெறும் 68 ரன்களுக்குள் இங்கிலாந்தின் கடைசி 4 விக்கெட்டுகளை வீழ்த்தி நெருக்கடி கொடுத்தனர். முகமது அலி வீசிய ஒரே ஓவரில் செட் பேட்டரான ஜேமி ஸ்மித் மற்றும் ஆலி ராபின்சன் ஆகிய இருவரின் விக்கெட்டுகளும் அடுத்தடுத்து சரிந்தன. இதனால் இங்கிலாந்து அணி 222 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து மீண்டும் சரிவைச் சந்தித்தது.
கடைசி கட்டத்தில் இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் கஸ் அட்கின்சன் அதிரடியாக விளையாடி 34 ரன்கள் குவித்து இங்கிலாந்தின் ஸ்கோரை 240 கடக்க உதவினார். இறுதியாக ஜோப்ரா ஆர்ச்சரை 10 ரன்களுக்கு ஆட்டமிழக்கச் செய்து முகமது அப்பாஸ் தனது 4-வது விக்கெட்டைக் கைப்பற்றினார். ஆட்டத்தின் 56-வது ஓவர் வீசப்பட்டுக் கொண்டிருந்த போது, மைதானத்தில் போதிய வெளிச்சம் இல்லாததால் ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. பின்னர், வெளிச்சம் மேம்படாததால் முதல் நாள் ஆட்டம் முடித்துக் கொள்ளப்படுவதாக நடுவர்கள் அறிவித்தனர்.
முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 9 விக்கெட் இழப்பிற்கு 248 ரன்கள் எடுத்துள்ளது. கஸ் அட்கின்சன் 34 ரன்களுடனும், ஜோஷ் டங் ஒரு ரன்னுடனும் களத்தில் உள்ளனர். பாகிஸ்தான் தரப்பில் அபாரமாக பந்துவீசிய முகமது அப்பாஸ் 4 விக்கெட்டுகளையும், முகமது அலி 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளனர்.


Click it and Unblock the Notifications

