PAK vs ENG: தனி ஆளு சிங்கம் போல் போராடிய பாகிஸ்தான் வீரர்.. 3 ரன்னில் சதத்தை தவறவிட்டாலும் சாதனை
லண்டன்: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் நான்காவது இன்னிங்ஸில், பாகிஸ்தான் பேட்ஸ்மேன் சவுத் ஷகீல் 122 பந்துகளில் 97 ரன்கள் குவித்து அசத்தினார். லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் துரதிர்ஷ்டவசமாக அவர் தனது சதத்தை மூன்று ரன்களில் தவறவிட்டாலும், பாகிஸ்தான் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு புதிய சாதனையை தன் வசமாக்கியுள்ளார்.
இதன் மூலம், இங்கிலாந்து மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியின் நான்காவது இன்னிங்ஸில் அதிக ரன்கள் குவித்த பாகிஸ்தான் பேட்ஸ்மேன் என்ற சாதனையை சவுத் ஷகீல் படைத்துள்ளார். இதற்கு முன்பு, கடந்த 2010ஆம் ஆண்டு ஜூலை மாதம் இதே லார்ட்ஸ் மைதானத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் சல்மான் பட் 173 பந்துகளில் 92 ரன்கள் எடுத்ததே சாதனையாக இருந்தது. தற்போது ஷகீல் அவரை முந்தி முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

சவுத் ஷகீல் இன்னும் மூன்று ரன்கள் எடுத்திருந்தால், இங்கிலாந்து மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியின் நான்காவது இன்னிங்ஸில் சதம் அடித்த முதல் பாகிஸ்தான் வீரர் என்ற வரலாற்றுச் சிறப்பைப் பெற்றிருப்பார். இதுவரை இங்கிலாந்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளின் நான்காவது இன்னிங்ஸில் இந்தியாவின் சார்பில் ஏழு பேட்ஸ்மேன்களும், இலங்கையின் சார்பில் ஒரு பேட்ஸ்மேனும் சதம் அடித்துள்ளனர்.
ஆனால், பாகிஸ்தான் அணியைச் சேர்ந்த எந்தவொரு பேட்ஸ்மேனும் இதுவரை இந்த இலக்கை எட்டவில்லை.மேலும், இப்போட்டியில் ஷகீல் சதம் அடித்திருந்தால், புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் டெஸ்ட் போட்டியின் நான்காவது இன்னிங்ஸில் சதம் கடந்த இரண்டாவது ஆசிய வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றிருப்பார்.
இதற்கு முன்னர், இந்திய கிரிக்கெட் அணியின் அஜித் அகர்கர் மட்டுமே கடந்த 2002ஆம் ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில், இந்தியாவிற்காக நான்காவது இன்னிங்ஸில் 109 ரன்கள் குவித்து இச்சாதனையைப் படைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் போட்டியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பாபர் அசாம், 6 ரன்களில் ஆட்டமிழந்தார்.


Click it and Unblock the Notifications

