தலைகுனிந்த பாகிஸ்தான்.. 147 வருட வரலாற்றில் எந்த அணியும் சந்திக்காத அவமானம்.. இங்கிலாந்து வெற்றி
முல்தான்: இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் கிரிக்கெட் சரித்திரத்திலேயே இல்லாத படுமோசமான தோல்வியை சந்தித்து இருக்கிறது பாகிஸ்தான் அணி. முதல் இன்னிங்ஸில் 556 ரன்கள் சேர்த்த பின்னரும் பாகிஸ்தான் அணி இன்னிங்ஸ் தோல்வியை சந்தித்து கிரிக்கெட் உலகின் படுமோசமான சாதனையை செய்தது. 147 வருட டெஸ்ட் கிரிக்கெட்டில் எந்த ஒரு அணியும் முதல் இன்னிங்ஸில் 550 ரன்கள் சேர்த்த பின் இன்னிங்க்ஸ் தோல்வியை சந்தித்ததில்லை.
அந்த வகையில் பாகிஸ்தான் தலைகுனிவை சந்தித்து உள்ளது. இந்த தோல்வி கிரிக்கெட் உலகில் கேலிக்குரிய விஷயமாக மாறி உள்ளது. முல்தானில் நடைபெற்ற இந்த டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. பிட்ச் முற்றிலும் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இருந்த நிலையில் பாகிஸ்தான் அணி அதை பயன்படுத்தி 149 ஓவர்களில் 556 ரன்கள் குவித்தது.

அந்த அணியின் மூன்று பேட்ஸ்மேன்கள் சதம் அடித்து இருந்தனர். அப்துல்லா ஷபிக் 102 ரன்களும், ஷான் மசூத் 151 ரன்கள், ஆகா சல்மான் 104 ரன்கள் குவித்து இருந்தனர். அடுத்து இரண்டாவது ஆடிய இங்கிலாந்து அணியின் துவக்க வீரரும், கேப்டனுமான ஒல்லி போப் இரண்டாவது ஓவரிலேயே டக் அவுட் ஆனார்.
ஆனால், அதன் பின்னர் அந்த அணி கூட்டணி அமைத்து ரன் குவிப்பில் ஈடுபட்டது. ஜாக் கிரவ்ளி 78 ரன்களும், பென் டக்கெட் 84 ரன்கள் சேர்த்தனர். ஜோ ரூட் மற்றும் ஹாரி ப்ரூக் இணைந்து நான்காவது விக்கெட்டுக்கு 454 ரன்கள் கூட்டணியாக ரன் சேர்த்தனர். ஜோ ரூட் 262 ரன்களும், ஹாரோ ப்ரூக் முச்சதத்தை கடந்து 317 ரன்களும் குவித்து இருந்தனர்.
இங்கிலாந்து அணி 150 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 823 ரன்கள் சேர்த்து டிக்ளர் செய்தது. அடுத்து இரண்டாவது இன்னிங்ஸ் ஆடிய பாகிஸ்தான் அணி நான்காம் நாளின் பிற்பகுதி மற்றும் ஐந்தாம் நாள் மீதமிருந்த நிலையில் நிதானமாக பேட்டிங் செய்து போட்டியை டிரா செய்யும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.
அதற்கு மாறாக விரைவாக ரன் குவிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஆடிய பாகிஸ்தான் அணி வரிசையாக விக்கெட்களை இழந்தது. ஐந்தாம் நாள் அன்று 220 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது பாகிஸ்தான். ஒரு இன்னிங்ஸ் மற்றும் 47 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி படுதோல்வி அடைந்தது. முதல் இன்னிங்ஸில் 500 ரன்களுக்கும் மேல் சேர்த்த பின் இன்னிங்ஸ் தோல்வி அடைந்த முதல் அணி என்ற பரிதாபமான சாதனையை செய்தது பாகிஸ்தான்.
மேலும், அந்த தொடர்ந்து சந்திக்கும் ஆறாவது டெஸ்ட் போட்டி தோல்வி இதுவாகும். மேலும், சொந்த மண்ணில் கடைசியாக ஆடிய 9 போட்டிகளில் பாகிஸ்தான் சந்திக்கும் 7 வது தோல்வி ஆகும். இந்த தொடரில் இன்னும் இரண்டு போட்டிகள் மீதமுள்ள நிலையில் பாகிஸ்தான் அணி அந்த இரண்டையும் வெற்றி பெற்றால் மட்டுமே தொடரை வெல்ல முடியும் என்ற நிலை உள்ளது.


Click it and Unblock the Notifications