PAK vs ENG: டபுள் செஞ்சுரியில் இமாலய சாதனை படைத்த ஜோ ரூட்.. சேவாக் சாதனையை சமன் செய்தார்
முல்தான்: பாகிஸ்தான் அணிக்கு எதிராக இங்கிலாந்து அணி முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. இந்தப் போட்டியில் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் பல்வேறு சாதனைகளை படைத்து இருக்கிறார். ஆசிய அளவில் அதிக இரட்டை சதம் அடித்த வெளிநாட்டு வீரர், மூன்று ஆசிய நாடுகளில் இரட்டை சதம் அடித்த வீரர், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் அதிக ரன்கள் ஆகிய சாதனைகளுடன் மேலும் சில மைல்கல் சாதனைகளையும் படைத்து இருக்கிறார்.
பாகிஸ்தானில் உள்ள முல்தான் மைதானத்தில் பேட்டிங்கிற்கு சாதகமான பிட்ச்சில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக ஜோ ரூட் மற்றும் ஹாரி ப்ரூக் சிறப்பாக பேட்டிங் செய்து ரன் குவிப்பில் ஈடுபட்டனர். பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்து 556 ரன்கள் குவித்து இருந்தது.

அடுத்த ஆடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 823 ரன்கள் குவித்தது. ஜோ ரூட் மற்றும் ஹாரி ப்ரூக் நான்காவது விக்கெட்டுக்கு 454 ரன்கள் கூட்டணியாக ரன் சேர்த்தனர். ஜோ ரூட் தனது ஆறாவது இரட்டை சதத்தை அடித்தார். அவர் 262 ரன்கள் அடித்து ஆட்டம் இழந்தார். மறுபுறம் ஹாரி ப்ரூக் 317 ரன்கள் அடித்து முச்சதத்தை நிறைவு செய்தார். ஜோ ரூட், தான் அடித்த இரட்டை சதம் மூலம் இமாலய சாதனையை படைத்து இருக்கிறார்.
ஆசியாவில் அதிக இரட்டை சதங்கள் அடித்த வெளிநாட்டு பேட்ஸ்மேன்கள் பட்டியலில் ஜோ ரூட் முதல் இடத்தை பிடித்து இருக்கிறார்.
ஆசியாவில் அதிக டெஸ்ட் இரட்டை சதங்கள் அடித்த வெளிநாட்டு வீரர்கள் -
ஜோ ரூட் (இங்கிலாந்து) - 3
ஏபி டி வில்லியர்ஸ் (தென் ஆப்பிரிக்கா) - 2
ஸ்டீபன் ஃப்ளெமிங் (நியூசிலாந்து) - 2
ரோஹன் கன்ஹாய் (வெஸ்ட் இண்டீஸ்) - 2
பிரையன் லாரா (வெஸ்ட் இண்டீஸ்) - 2
பிரண்டன் மெக்கல்லம் (நியூசிலாந்து) - 2
கிரேம் ஸ்மித் (தென் ஆப்பிரிக்கா) - 2
இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய ஆசிய நாடுகளில் மற்ற வெளிநாட்டு பேட்ஸ்மேன்கள் அதிக ரன் குவிப்பது சிரமம் என்ற கருத்து உள்ளது. இந்த நான்கு ஆடுகளங்களில் பாகிஸ்தானை தவிர்த்து மற்ற மூன்று நாடுகளிலும் சுழற் பந்துவீச்சுக்கு சாதகமான சூழ்நிலை நிலவும்.
இந்த நிலையிலும் ஜோ ரூட் ஆசியாவில் மூன்று இரட்டை சதங்களை அடித்து இருக்கிறார். அதிலும் இந்தியா, இலங்கை மற்றும் பாகிஸ்தான் என மூன்று வெவ்வேறு நாடுகளில் இரட்டை சதங்களை அடித்து அசத்தி இருக்கிறார். இந்தியா இலங்கை மற்றும் பாகிஸ்தான் ஆகிய மூன்று நாடுகளிலும் இரட்டை சதங்கள் அடித்தவர்கள் பட்டியலில் ஜோ ரூட் மூன்றாவதாக இணைந்து இருக்கிறார்.
இதற்கு முன் வீரேந்தர் சேவாக் மற்றும் இலங்கையின் மகிளா ஜெயவர்த்தனே ஆகிய இருவர் மட்டுமே அந்த சாதனையை செய்து இருந்தனர். மேலும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் 5000 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற பிரம்மாண்ட மைல்கல் சாதனையையும் செய்து இருக்கிறார் ஜோ ரூட். தற்போது அவர் 5235 ரன்கள் குவித்து இருக்கிறார்.
மேலும், 2024 ஆம் ஆண்டு 1000 டெஸ்ட் ரன்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனையையும் செய்தார். இங்கிலாந்து அணிக்காக அதிக ரன் குவித்த வீரர்கள் பட்டியலில் அலஸ்டர் குக்கை முந்தி முதல் இடத்தை பிடித்து இருக்கிறார். ஒட்டுமொத்த டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன் குவித்த வீரர்கள் பட்டியலில் ஐந்தாவது இடத்தையும் பிடித்திருக்கிறார்.


Click it and Unblock the Notifications