ராவல்பிண்டி: இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை பாகிஸ்தான் அணி 2 - 1 என கைப்பற்றி இருக்கிறது. இந்த தொடரை பாகிஸ்தான் வெல்வதற்கு முக்கியமான காரணம் இரண்டு ஸ்பின்னர்கள் மட்டுமே. இந்த தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி தோல்வி அடைந்ததை அடுத்து அணியில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டன.
அதில் ஒரு முக்கிய மாற்றமாக 38 வயதான நோமன் அலி மற்றும் 31 வயதான சஜித் கான் என இரண்டு ஸ்பின்னர்கள் அணியில் சேர்க்கப்பட்டனர். சுழற் பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளங்கள் தயாரிக்கப்பட்டன. இரண்டாவது மற்றும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியை சுழற் பந்துவீச்சை வைத்து சமாளிக்க பாகிஸ்தான் அணி முடிவு செய்தது.

அதை நோமன் அலி மற்றும் சஜித் கான் எப்படி செய்து முடித்தார்கள் என்பதுதான் கிரிக்கெட் உலகை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இங்கிலாந்து அணி அவர்கள் பந்துவீச்சை கண்டு அரண்டு போயுள்ளது. இந்த தொடரின் கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகளில் மொத்தம் நான்கு இன்னிங்ஸ்களில் இங்கிலாந்து அணியின் 40 விக்கெட்களில் 39 விக்கெட்களை இவர்கள் இருவர் மட்டுமே வீழ்த்தி இருக்கின்றனர்.
இரண்டாவது டெஸ்ட் போட்டியில் சஜித் கான் 9 விக்கெட்களும் நோமன் அலி 11 விக்கெட்களும் வீழ்த்தினர். மூன்றாவது டெஸ்ட் போட்டியில் சஜித் கான் 10 விக்கெட்களும், நோமன் அலி 9 விக்கெட்களும் வீழ்த்தினர். இந்த நான்கு இன்னிங்ஸ்களிலும் மற்ற பாகிஸ்தான் பந்து வீச்சாளர்கள் அனைவரும் சேர்ந்து மொத்தமே 26 ஓவர்கள் மட்டுமே பந்து வீசினர்.
மற்ற ஓவர்கள் அனைத்தையும் சஜித் கான் மற்றும் நோமன் அலி மட்டுமே வீசினர். அவர்கள் பந்துவீச்சில் இங்கிலாந்து அணி திணறுகிறது என்பதை உணர்ந்த பாகிஸ்தான் அணி நிர்வாகம் இவர்கள் இருவரையும் மட்டுமே தொடர்ந்து பந்து வீச வைத்தது. 30 வயதை கடந்த சஜித் கான் மற்றும் 38 வயது ஆன நோமன் அலி ஆகிய இருவரும் எந்த சந்தர்ப்பத்திலும் சோர்வடையாமல் தொடர்ந்து மாற்றி, மாற்றி பந்து வீசினர்.
இவர்கள் இருவரால் தான் பாகிஸ்தான் அணி சுமார் மூன்று ஆண்டுகளுக்கு பின் தன் சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரில் வெற்றி பெற்று இருக்கிறது. இத்தனை ஆண்டுகளாக இவர்கள் இருவரும் உள்ளூர் கிரிக்கெட்டில் மட்டுமே விளையாடி வந்தனர். ஏற்கனவே, பாகிஸ்தான் டெஸ்ட் அணியில் இவர்கள் இருவரும் ஆடி இருந்தாலும் அதன் பின்னர் அவர்களுக்கு போதிய வாய்ப்பு அளிக்கப்படவில்லை.
தொடர்ந்து வேகப்பந்துவீச்சாளர்களுக்கு பாகிஸ்தான் அணியில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வந்தது. தற்போது இவர்கள் இருவரும் வேகப் பந்துவீச்சாளர்களை விடவும் அதிக விக்கெட்களை வீழ்த்தியதை அடுத்து பாகிஸ்தான் அணி இவர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பு அளிக்க வேண்டும் என்ற குரல் எழுந்துள்ளது. பாகிஸ்தான் அணி மூன்று ஆண்டுகளுக்கு பின் தங்கள் சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்றி இருக்கும் நிலையில், அணியில் இருந்து நீக்கப்பட்ட பாபர் அசாம் மற்றும் ஷஹீன் ஷா அப்ரிடி மீண்டும் வாய்ப்பு பெறுவார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது.