Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஜெர்சி முழுக்க வழிந்த ரத்தம்.. அசையாமல் களத்தில் நின்ற பாகிஸ்தான் வீரர் சாஜித் கான்.. என்ன நடந்தது?

ராவல்பிண்டி: இங்கிலாந்து அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணியின் சாஜித் கான் ரத்தம் வந்த போதும், களத்தில் நின்று பேட்டிங் ஆடிய சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் அணி தடுமாறிய போது, சாவுத் சக்கீலுடன் இணைந்து விளையாடி சாஜித் கான் மீட்டெடுத்துள்ளார்.

இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி விளையாடி வருகிறது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 267 ரன்களை விளாசியது. பாகிஸ்தான் அணி தரப்பில் சாஜித் கான் 6 விக்கெட்டுகளையும், நோமன் அலி 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதனைத் தொடர்ந்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி 177 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

pak vs eng sajid khan shan masood

அப்போது சாவுத் சக்கீல் மற்றும் நோமன் அலி இருவரும் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 8வது விக்கெட்டுக்கு இணைந்த இவர்கள் இருவரும் பாகிஸ்தான் அணியின் ஸ்கோரை 265 ரன்களாக உயர்த்தினர். அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நோமன் அலி 45 ரன்களில் ஆட்டமிழக்க, பின்னர் சக்கீல் - சாஜித் கான் கூட்டணி இணைந்தது. தேநீர் இடைவேளைக்கு பின் பாகிஸ்தான் அணி முன்னிலை பெற தொடங்கியது.

அதேபோல் ஒரு பக்கம் சாவுத் சக்கீலும் சதம் விளாசி அசத்தியிருந்ததால், சாஜித் கான் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சோயப் பஷீர் வீசிய ஒரே ஓவரில் 2 சிக்ஸ், ஒரு பவுண்டரி உட்பட 19 ரன்களை சாஜித் கான் விளாசினார். ஜாக் லீச் மற்றும் சோயப் பஷீர் இருவரையும் வெளுத்து கட்டியதால், இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ், ரெஹான் அஹ்மத்தை அட்டாக்கில் கொண்டு வந்தார்.

அப்போது ரெஹான் அஹ்மத் வீசிய பந்தை ரிவர்ஸ் ஸ்வீப் அடிக்க சாஜித் கான் முயற்சித்தார். அந்த பந்து நேராக சாஜித் கானின் முகத்தில் அடித்து சென்றது. இதனால் சாஜித் கானின் முகத்தில் இருந்து ரத்தம் வழிய, அருகில் நின்ற நடுவர் உடனடியாக அவரிடம் ரத்தம் வருவதாக தெரிவித்தார். பின்னர் பாகிஸ்தான் அணியின் மருத்துவர் விரைவாக களத்திற்கு வந்து சிகிச்சை கொடுத்தார்.

ஆனாலும் சாஜித் கானின் முகத்தில் இருந்து வழிந்த ரத்தம், அவரின் ஜெர்சியில் வழிய தொடங்கியது. இது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் சாஜித் கான் களத்தில் இருந்து வெளியேறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் களத்தில் இருந்து வெளியேற மறுத்து பேட்டிங் செய்தார். சிறப்பாக ஆடிய அவர், 48 பந்துகளில் 4 சிக்ஸ், 2 பவுண்டரி 48 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இதனால் பாகிஸ்தான் அணி 344 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாகியது. 77 ரன்கள் முன்னிலை பாகிஸ்தான் அணி முன்னிலை பெற்ற நிலையில், 2வது நாளில் கடைசி நேரத்தில் பேட்டிங் செய்ய வந்த இங்கிலாந்து அணி 24 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. சாஜித் கான் ரத்தம் வழிந்த போதும், அசராமல் களத்தில் பேட்டிங் செய்தது ரசிகர்களிடையே பாராட்டுகளை பெற்று வருகிறது.

Story first published: Friday, October 25, 2024, 18:28 [IST]
Other articles published on Oct 25, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+