கராச்சி: சாம்பியன்ஸ் டிராபியில் முதல் லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை 60 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வீழ்த்தியது. இதன் மூலம் இந்த தொடர் பாகிஸ்தானுக்கு ஆரம்பமே அதிர்ச்சியை தந்துள்ளது. கராச்சியில் நடைபெற்ற முதல் லீக் ஆட்டத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் ரிஸ்வான் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதனை அடுத்து களம் இறங்கிய நியூஸிலாந்து அணியில் சிஎஸ்கே வீரர் கான்வே 10 ரன்களிலும், நட்சத்திர வீரர் வில்லியம்சன் ஒரு ரன்னிலும், முன்னாள் சிஎஸ்கே வீரர் மிட்செல் 10 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர்.

ஒரு பக்கம் விக்கெட்டுகள் விழுந்தாலும் மறுபக்கம் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தொடக்க வீரர் வில் யங் 113 பந்துகளில் 107 ரன்கள் குவித்து அசத்தினார். இதேபோன்று நடுவரிசையில் விளையாடிய டாம் லாத்தமும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஒரு கட்டத்தில் டாம் லாத்தம், கிளன் பிலிப்ஸ் ஜோடி சேர்ந்து நியூசிலாந்து அணியின் ரன்குவிப்பை அதிகரித்தனர்.
டாம் லாத்தம், 14 பந்துகளில் 118 ரன்கள் குவித்தார். இதில் 10 பவுண்டரிகளும்,மூன்று சிக்ஸர்களும் அடங்கும். இறுதியில் 39 பந்துகளில் 61 ரன்கள் சேர்த்தார். இதில் நான்கு சிக்ஸர்களும், மூன்று பவுண்டரிகளும் அடங்கும். இதன் மூலம் 50 ஓவர் முடிவில் நியூசிலாந்து அணி ஐந்து விக்கெட் இழப்பிற்கு 320 ரன்கள் எடுத்தது.
பாகிஸ்தான் பந்துவீச்சு தரப்பில் நஷிம் ஷா இரண்டு விக்கெட்களும், ஹரிஷ் ரவுப் இரண்டு விக்கெட்டுகளையும், அப்ரார் அகமது ஒரு விக்கெட் வீழ்த்தி இருந்தனர். கராச்சியில் அண்மையில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக பாகிஸ்தான் மோதியபோது 350 ரன்களுக்கு மேல் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதனை பாகிஸ்தான் வெற்றிகரமாக துரத்தியது. இதன் காரணமாக இந்தப் போட்டியில் பாகிஸ்தான் வெல்லும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு சோகமே மிஞ்சியது.
பகார் சமான் தொடக்க வீரராக களமிறங்காததால், சவுத் ஷக்கில் என்ற நடுவரிசை வீரரை பாகிஸ்தான் ஓபனிங்கிற்கு அனுப்பியது. பாபர் அசாமும், ஷகிலும் டெஸ்ட் கிரிக்கெட் போல் விளையாடி ரசிகர்களை வெறுப்படைய செய்தனர். ஷகில் 6 ரன்களிலும், ரிஸ்வான் 3 ரன்களிலும் ஆட்டமிழக்க பகார் சமான் 24 ரன்கள் எடுத்தார். ஒரு பக்கம் விக்கெட்டுகள் சரிய, பாபர் அசாம் மட்டும் நிதானமாக விளையாடி அரைசதம் அடித்தார். சல்மான் அகா 42 ரன்களிலும், குஷ்தில் ஷா 49 பந்துகளில் 69 ரன்களும் எடுக்க, மற்ற வீரர்கள் துணை நிற்காததால், பாகிஸ்தான் அணி 47.2 ஓவரில் 260 ரன்கள் எடுத்து தோல்வியை தழுவியது.