பெங்களூரு: உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஒரு போட்டியில் அதிக சிக்சர்கள் விளாசிய வீரர்கள் பட்டியலில் இடம்பிடித்து பாகிஸ்தான் அணியின் ஃபகர் ஜமான் அசத்தியுள்ளார்.
பெங்களூரு மைதானத்தில் பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நேற்று நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் ஆடிய நியூசிலாந்து அணி 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 401 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ரச்சின் ரவீந்திரா 108 ரன்களும், கேன் வில்லியம்சன் 95 ரன்களும் விளாசினர். அதேபோல் பாகிஸ்தான் அணி தரப்பில் இளம் வீரர் முகமது வாசிம் ஜூனியர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதனைத் தொடர்ந்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி 25.3 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 200 ரன்கள் சேர்த்திருந்த போது, திடீரென மழை குறுக்கிட்டது. அப்போது பாகிஸ்தான் அணியின் ஃபகர் ஜமான் 81 பந்துகளில் 126 ரன்களும், கேப்டன் பாபர் அசாம் 66 ரன்களும் சேர்த்து களத்தில் இருந்தனர். கனமழை தொடர்ந்து பெய்ததால், ஆட்டம் நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது.
இதன் காரணமாக பாகிஸ்தான் அணி டிஎல்எஸ் விதிமுறைப்படி 21 ரன்கள் முன்னிலையில் இருந்ததால், பாகிஸ்தான் அணி வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் பாகிஸ்தான் அணி புள்ளிப்பட்டியலில் 8 புள்ளிகளுடன் 5வது இடத்திற்கும் முன்னேறி இருப்பதோடு, அரையிறுதி பந்தயத்திலும் முன்னிலையில் உள்ளது. பாகிஸ்தான் அணியின் இந்த வெற்றிக்கு தொடக்க அதிரடி வீரர் ஃபகர் ஜமான் காரணமாக அமைந்தார்.
உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்காக அதிவேகமாக சதம் அடித்து அசத்தினார். 63 பந்துகளில் சதம் அடித்த ஃபகர் ஜமான், அதன்பின் சிக்சர்களாக விளாசி தள்ளினார். மொத்தமாக 81 பந்துகளில் 11 சிக்ஸ், 8 பவுண்டரி உட்பட 126 ரன்களை விளாசினார். இதன் மூலமாக உலகக்கோப்பை தொடரில் ஒரே போட்டியில் அதிக சிக்சர்கள் விளாசிய வீரர்கள் பட்டியல் ஃபகர் ஜமான் இடம்பிடித்துள்ளார்.
உலகக்கோப்பை கிரிக்கெட்டில் ஒரே போட்டியில் அதிக சிக்சர்களை விளாசிய வீரர்கள் பட்டியல் 17 சிக்சர்களுடன் மோர்கன் முதலிடத்தில் உள்ளார். அதன்பின் 16 சிக்சர்களுடன் கிறிஸ் கெய்ல் 2வது இடத்திலும், 11 சிக்சர்களுடன் கப்தில் 3வது இடத்திலும், 11 சிக்சர்களுடன் ஃபகர் ஜமான் 4வது இடத்திலும் உள்ளனர்.

அதேபோல் பாகிஸ்தான் அணியில் ஃபகர் ஜமானுக்கு முன் 1996 உலகக்கோப்பை தொடரில் இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் ஷாகித் அப்ரிடி 11 சிக்சர்களை விளாசி சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. நடப்பு உலகக்கோப்பை தொடரில் ரோகித் சர்மா 7 போட்டிகளில் விளையாடி 18 சிக்சர்களை விளாசியுள்ள நிலையில், ஃபகர் ஜமான் 3 இன்னிங்ஸ்களில் 17 சிக்சர்களை விளாசியுள்ளது குறிப்பிடத்தக்கது.