92 ரன்களில் சுருண்ட நியூசிலாந்து..சிஎஸ்கேவின் குட்டி ஜடேஜா ஏமாற்றம்.. ஆறுதல் வெற்றி பெற்ற பாகிஸ்தான்
கிறிஸ்ட்சர்ச் : பாகிஸ்தானுக்கு எதிரான ஐந்தாவது டி20 போட்டியில் நியூசிலாந்த அணி 92 ரன்களில் சுருண்டு தோல்வியை தழுவியது. ஐந்து டி20 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் நான்குக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் நியூசிலாந்து அணி முன்னிலை பெற்றிருந்தது.
இந்த நிலையில் கடைசி டி20 போட்டி கிறிஸ்ட்சர்ச் நகரில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து தொடக்க வீரராக களமிறங்கிய ஹசிபுல்லாகான் டக் அவுட் ஆக, பாபர் அசாம், 13 ரன்களில் வெளியேறினார்.

முஹம்மது ரிஸ்வான், ஃபக்கர் சாமான் ஆகியோர் தலா 38 மற்றும் 33 ரன்கள் சேர்க்க முகமது நவாஸ் ஒரு ரன்னில் வெளியேறினார். கேப்டன் ஷாகின் அப்ரிடி ஒரு ரன்னிலும், ஃபர்ஹான் 19 ரன்களிலும் அப்பாஸ் அப்ரிடி 15 ரன்கள் எடுக்க பாகிஸ்தான் அணி எட்டு விக்கெட் இழப்பிற்கு 134 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து 135 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று எளிய இலக்குடன் களமிறங்கிய பின் ஆலன் 22 ரன்களில் ஆட்டமிழந்தார்.
சிஎஸ்கே புதிதாக வாங்கிய ரச்சின் ரவீந்திரா ஒரு ரன்னில் மட்டும் ஆட்டம் இழந்தார். டிம் செபர்ட் 19 ரன்கள்,வில் யங் 12 ரன்கள், மார்க் சாப்மேன் ஒரு ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டம் இழக்க பின்வரிசையில் களமிறங்கிய அனைத்து வீரர்களும் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டம் இழந்தனர். இதனால் நியூசிலாந்து அணி 17.2 ஓவர்களில் 92 ரன்களில் சுருண்டு தோல்வியை தழுவியது.
பாகிஸ்தான் பந்துவீச்சு தரப்பில் முஹம்மத் நவாஸ், ஷாகின் ஆப்ரிடி ஆகியோர் தலா இரண்டு விக்கெட் களையும் இப்திகார் அஹமது மூன்று விக்கெட்டுகளையும் கைப்பற்றி பாகிஸ்தானுக்கு ஆறுதல் வெற்றியை பெற்று தந்தனர். சிஎஸ்கே அணி ஐபிஎல் மினி ஏலத்தில் வாங்கிய ரச்சின் ரவிந்திரா ஒரு ரன் மட்டும் தான் எடுத்தார். கடந்த உலகக்கோப்பை போட்டியில் சதம் மேல் சதம் அடித்து அசத்திய ரச்சின் ரவிந்திராவை சிஎஸ்கே போட்டி போட்டு வாங்கியது. ஆனால் அதன் பிறகு அவர் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.


Click it and Unblock the Notifications