கராச்சி: 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரின் முதல் போட்டியிலேயே பாகிஸ்தான் அணி நியூசிலாந்திடம் 60 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளது. இதன் மூலம் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நியூசிலாந்து அணிக்கு எதிராக ஒரு முறை கூட பாகிஸ்தான் அணி வெற்றி பெறவில்லை என்ற மோசமான நிகழ்வு மீண்டும் நிகழ்ந்துள்ளது.
சாம்பியன்ஸ் டிராபியில் பாகிஸ்தான் - நியூசிலாந்து இதுவரை நான்கு முறை மோதி உள்ளன. அந்த நான்கு முறையும் பாகிஸ்தான் அணி தோல்வி அடைந்து இருக்கிறது.

2000 ஆமாவது ஆண்டு முதல் முறையாக பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் சந்தித்தன. அந்தப் போட்டியில் நியூசிலாந்து அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
2006 ஆமாவது ஆண்டு இந்தியாவில் உள்ள மொஹாலியில் இந்த இரண்டு அணிகளும் சந்தித்தன. அந்தப் போட்டியில் நியூசிலாந்து அணி 51 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 2009 ஆமாவது ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதியில் நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. அந்தப் போட்டியில் நியூசிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
தற்போது 2025 ஆம் ஆண்டு பாகிஸ்தானின் சொந்த மண்ணில் நடந்த போட்டியிலும் நியூசிலாந்து அணி பாகிஸ்தானை 60 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளது. கராச்சியில் நடைபெற்ற இந்தப் போட்டியில் நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது.
அந்த அணியின் துவக்க வீரர் வில் யங் 113 பந்துகளில் 107 ரன்கள் சேர்த்தார். டாம் லாதம் 118 ரன்கள் சேர்த்தார். கடைசி நேரத்தில் அதிரடி ஆட்டம் ஆடிய கிளென் பிலிப்ஸ் 39 பந்துகளில் 61 ரன்கள் சேர்த்தார். நியூசிலாந்து அணி 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 320 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய பாகிஸ்தான் அணி ஆமை வேகத்தில் ரன் சேர்த்து சொதப்பி, 47.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 260 ரன்கள் மட்டுமே எடுத்தது.
தொடரும் தோல்விகள்
சாம்பியன்ஸ் டிராபியில் மட்டுமின்றி, நியூசிலாந்து அணிக்கு எதிராக ஆடிய கடைசி நான்கு ஒருநாள் போட்டிகளிலும் பாகிஸ்தான் அணி தோல்வி அடைந்துள்ளது. குறிப்பாக சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு முன் பாகிஸ்தானில் நடந்த முத்தரப்பு ஒருநாள் தொடரில் முதல் சுற்று மற்றும் இறுதிப் போட்டியிலும் நியூசிலாந்து அணியிடம் பாகிஸ்தான் அணி தோல்வி அடைந்தது. தற்போது சாம்பியன்ஸ் டிராபி தொடரின் முதல் போட்டியிலும் பாகிஸ்தான் அணி நியூசிலாந்து அணியிடம் தோல்வி அடைந்துள்ளது.
பாகிஸ்தானுக்கு நெருக்கடி
இதன் மூலம் பாகிஸ்தான் அணிக்கு நியூசிலாந்து அணி ஒருநாள் போட்டிகளில் சிம்ம சொப்பனமாக மாறியுள்ளது. இது பாகிஸ்தான் அணிக்கு தற்போது கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. குரூப் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள நியூசிலாந்து அணி புள்ளிப் பட்டியலில் இரண்டு புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. பாகிஸ்தான் அணி ஒரு போட்டியில் தோல்வி அடைந்து கடைசி இடத்தில் உள்ளது.