சென்னை: சர்வதேச கிரிக்கெட்டில் தங்களது அணிகளுக்கு வெற்றியை தேடி கொடுப்பவர்களே நம்பர் 1 பேட்ஸ்மேன்கள் என்று பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாமை காட்டமாக விமர்சித்துள்ளார் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர்.
தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி தோல்வியடைந்தது. இதன் மூலமாக உலகக்கோப்பை கிரிக்கெட் வரலாற்றிலேயே பாகிஸ்தான் அணி தொடர்ச்சியாக 4 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 46.4 ஓவர்களில் 270 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாகியது.

இதன் பின் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி, 47.2 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 271 ரன்கள் எடுத்து அபார வெற்றியை பதிவு செய்தது. இந்த உலகக்கோப்பை தொடரில் தென்னாப்பிரிக்கா அணி முதல்முறையாக சேஸிங்கில் வெற்றிபெற்றுள்ளது. அதுமட்டுமல்லாமல் புள்ளிப்பட்டியலிலும் தென்னாப்பிரிக்கா அணி முதலிடத்தை பிடித்துள்ளது.
இந்த போட்டியில் பாகிஸ்தான் அணியின் தோல்விக்கு அந்த அணியின் பேட்ஸ்மேன்களே முக்கிய காரணமாக அமைந்துள்ளனர். 50 ஓவர்கள் முழுமையாக விளையாடியிருந்தால், நிச்சயம் 285 முதல் 295 ரன்களையாவது சேர்த்திருக்க முடியும். ஆனால் கொஞ்சம் கூட நிதானமின்றி சிக்சர் மற்றும் பவுண்டரி அடிக்க முயன்று ஆட்டமிழந்து வெளியேறினர்.
இந்த போட்டியில் அரைசதம் விளாசிய பாபர் அசாம், அடுத்த பந்திலேயே ஆட்டமிழந்து வெளியேறினார். நடப்பு உலகக்கோப்பை தொடரில் 3வது முறையாக பெரிய ஸ்கோரை அடிக்க முடியாமல் பாபர் அசாம் ஆட்டமிழந்து வெளியேறி இருக்கிறார். அவரது ஆட்டமும் பாகிஸ்தான் அணியின் தோல்விக்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக உள்ளது.
பாபர் அசாம் குறித்து இந்திய முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் பேசுகையில், உலகக்கோப்பை தொடரில் தாக்கத்தை ஏற்படுத்தும் அளவிற்கு ஒரு இன்னிங்ஸை கூட பாபர் அசாம் விளையாடவில்லை. என்னை பொறுத்தவரை சாதனைகளும், தரவரிசை பட்டியலும் ஊதிபெருக்கட்ட பலூன் போன்றவை. தாங்கள் இருக்கும் அணியை வெற்றிபெற வைப்பவர்களே நம்பர் 1 பேட்ஸ்மேன் என்று விமர்சித்துள்ளார்.
தொடர்ந்து பேசுகையில், உலகக்கோப்பை தொடருக்கு பின் பாகிஸ்தான் அணி வீரர்கள் அனைவரும் அவர்களின் ஃபிட்னஸில் கவனம் செலுத்த வேண்டும். ஏனென்றால் பாகிஸ்தான் அணியின் ஃபீல்டிங்கிற்கும், மற்ற 9 அணிகளின் ஃபீல்டிங்கிற்கும் மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது என்று தெரிவித்துள்ளார். உலகக்கோப்பை தொடர் தொடங்குவதற்கு முன், உலகக்கோப்பை தொடரில் பாபர் அசாம் பேட்டிங் நெருப்பு மாதிரி இருக்கும் என்று கவுதம் கம்பீர் கூறியது குறிப்பிடத்தக்கது.