ராவல்பிண்டி: சர்வதேச கிரிக்கெட்டிற்கு மீண்டும் திரும்பிய தென்னாப்பிரிக்க வீரர் குவின்டன் டி காக், தனது 22வது ஒருநாள் சதத்தை அடித்து அசத்தினார். இதன்மூலம், பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் தென்னாப்பிரிக்கா 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், மூன்று போட்டிகள் கொண்ட தொடரை 1-1 எனச் சமன் செய்துள்ளது.
ஒருநாள் போட்டிகளிலிருந்து 2023-ல் ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்த இடது கை பேட்ஸ்மேனான டி காக், பாகிஸ்தானுக்கு எதிரான இந்தத் தொடருக்காகத் தனது முடிவை மாற்றிக்கொண்டார். தொடக்க வீரராக களமிறங்கிய டி காக், 270 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணிக்கு, 119 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 123 ரன்கள் குவித்து, அணியின் வெற்றியை உறுதி செய்தார். தென்னாப்பிரிக்க அணி 40.1 ஓவர்களிலேயே இலக்கை எட்டியது.

முன்னதாக, டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. தென்னாப்பிரிக்காவின் பந்துவீச்சைத் தாக்குப்பிடிக்க முடியாமல், பாகிஸ்தான் அணி 269 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்தது. வேகப்பந்து வீச்சாளர் நான்ட்ரே பர்கர் மற்றும் சுழற்பந்து வீச்சாளர் நபாஹ்யோம்ஸி பீட்டர் ஆகியோர் தங்களது சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி பாகிஸ்தானைக் கட்டுப்படுத்தினர். நான்ட்ரே பர்கர் 46 ரன்கள் விட்டுக் கொடுத்து 4 விக்கெட்களை வீழ்த்தினார். நபாஹ்யோம்ஸி பீட்டர் 55 ரன்களை விட்டுக் கொடுத்து 3 விக்கெட்களை கைப்பற்றினார். இது இவர்களின் ஒருநாள் கிரிக்கெட் வாழ்வில் சிறந்த பந்துவீச்சாக அமைந்தது.
ஆட்டத்தின் தொடக்கத்திலேயே தென்னாப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சாளர் நான்ட்ரே பர்கர், பாகிஸ்தானின் டாப் ஆர்டரை சரித்தார். அவரது வேகத்தில் ஃபகார் ஜமான், பாபர் ஆசாம் (11) மற்றும் முகமது ரிஸ்வான் ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, பாகிஸ்தான் 22 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
பின்னர், சல்மான் அலி ஆகா 69 ரன்கள் குவித்தும், சயிம் அயூப் 53 ரன்கள் சேர்த்தும் அணியை சரிவிலிருந்து மீட்டனர். இந்த ஜோடி 92 ரன்கள் சேர்த்தது. இருப்பினும், இவர்களின் விக்கெட்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தான் மீண்டும் தடுமாறியது. இறுதியில், முகமது நவாஸின் அதிரடியான 59 ரன்களால் பாகிஸ்தான் அணி 269 ரன்களை எட்டியது.
270 ரன்கள் என்ற இலக்கைத் துரத்திய தென்னாப்பிரிக்க அணிக்கு, டி காக் மற்றும் 19 வயதான லுவான்-ட்ரே பிரிட்டோரியஸ் ஆகியோர் சிறப்பான தொடக்கத்தை அளித்தனர். இந்த ஜோடி 71 பந்துகளில் 81 ரன்கள் சேர்த்து வலுவான அடித்தளமிட்டது. பிரிட்டோரியஸ் 18 ரன்னில் இருந்தபோது நசீம் ஷா ஒரு கேட்ச்சை தவறவிட்டார். லுவான்-ட்ரே பிரிட்டோரியஸ் 46 ரன்கள் சேர்த்தார்.
பிரிட்டோரியஸ் ஆட்டமிழந்த பிறகு, டி காக்குடன் ஜோடி சேர்ந்த டோனி டி சோர்ஸி, தனது டெஸ்ட் போட்டியின் ஃபார்மை ஒருநாள் போட்டியிலும் தொடர்ந்தார். இந்த ஜோடி 137 பந்துகளில் 153 ரன்கள் குவித்து பாகிஸ்தானின் வெற்றிக் கனவைத் தகர்த்தது. டி காக் 96 பந்துகளில் தனது சதத்தை நிறைவு செய்தார். டி காக் 15 ரன்களில் இருந்த போது முகமது நவாஸ் ஒரு கேட்ச்சை தவறவிட்டு இருந்தார். அது பாகிஸ்தானுக்குப் பெரும் பின்னடைவாக அமைந்தது.
அதிரடியாக ஆடிய டி சோர்ஸி 63 பந்துகளில் 7 சிக்ஸர்கள் மற்றும் 8 பவுண்டரிகளுடன் 76 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியில், கேப்டன் மேத்யூ பிரீட்ஸ்கேவுடன் இணைந்து டி காக் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.
வெற்றிக்குப் பிறகு பேசிய குவின்டன் டி காக், "மீண்டும் அணியுடன் இணைந்தது மகிழ்ச்சியளிக்கிறது. கூடுதல் பொறுப்புடன் விளையாடுவது நல்லது. இந்த அணியில் உள்ள பல வீரர்களுடன் நான் இதற்கு முன் விளையாடியதில்லை, ஆனால் புதிய நண்பர்களை உருவாக்குவது மகிழ்ச்சியாக இருக்கிறது. கடந்த இரண்டு போட்டிகளிலும் வீரர்கள் சிறப்பாக பேட்டிங் செய்துள்ளனர்" என்றார்.
தொடரைத் தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி ஃபைசலாபாத்தில் சனிக்கிழமை நடைபெறுகிறது. 17 ஆண்டுகளுக்குப் பிறகு ஃபைசலாபாத்தில் சர்வதேசப் போட்டி நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.