உலகிலேயே எந்த பேட்ஸ்மேனும் செய்யாத சாதனையை செய்த பாகிஸ்தான் வீரர்.. கோலி ரெக்கார்டை உடைத்த பாபர்
செஞ்சுரியன்: பாகிஸ்தான் அணியின் முன்னணி பேட்ஸ்மேன் ஆன பாபர் அசாம் டி20 போட்டிகளில் பிரம்மாண்ட சாதனையை செய்து இருக்கிறார். கிறிஸ் கெயில், விராட் கோலி, டேவிட் வார்னர் போன்ற ஜாம்பவான்களின் டி20 சாதனை ஒன்றை அவர் முறியடித்து இருக்கிறார். மேலும், சர்வதேச கிரிக்கெட்டில் 14,000 ரன்களை கடந்து அசத்தி இருக்கிறார்.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் பாபர் அசாம் 20 பந்துகளில் 31 ரன்கள் எடுத்தார். அதன் மூலம் அவர் டி20 கிரிக்கெட்டில் 11,000 ரன்கள் என்ற மைல் கல்லை கடந்தார். டி20 போட்டிகளில் மிக விரைவாக 11,000 ரன்கள் எடுத்த வீரர் என்ற இமாலய சாதனையை படைத்து இருக்கிறார் பாபர் அசாம்.

அவர் 299 இன்னிங்ஸ்களில் 11000 டி20 ரன்களை எட்டி இருக்கிறார். இதற்கு முன் கிறிஸ் கெயில் 314 இன்னிங்ஸ்களில் இந்த 11000 டெஸ்ட் ரன்களை எடுத்து இருந்தார். அவருக்கு அடுத்ததாக டேவிட் வார்னர் 330 இன்னிங்ஸ்களிலும், விராட் கோலி 337 இன்னிங்ஸ்களிலும் 11,000 ரன்களை கடந்து இருந்தனர்.
அந்த ஜாம்பவான்களை எல்லாம் முந்தி இருக்கிறார் பாபர் அசாம். மேலும், இந்தப் போட்டியில் 31 ரன்கள் எடுத்ததன் மூலம் பாபர் அசாம் 14,000 சர்வதேச ரன்களையும் கடந்து இருக்கிறார். விராட் கோலிக்கு அடுத்து மிக விரைவாக 14,000 சர்வதேச ரன்கள் எடுத்த ஆசிய வீரர் என்ற சாதனையையும் அவர் செய்து இருக்கிறார்.
விராட் கோலி 313 இன்னிங்ஸ்களில் 14,000 சர்வதேச ரன்களை குவித்து இருந்தார். தற்போது பாபர் அசாம் 338 இன்னிங்ஸ்களில் 14,000 சர்வதேச ரன்களை கடந்து இருக்கிறார். பாபர் அசாம் மற்றொரு முக்கிய சாதனையை முறியடிக்கும் வாய்ப்பை தவறவிட்டு இருக்கிறார்.
சர்வதேச டி20 போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் தற்போது பாபர் அசாம் இரண்டாவது இடத்தில் இருக்கிறார். முதல் இடத்தில் ரோஹித் சர்மா இருக்கிறார். அவரை முந்த பாபர் அசாமுக்கு இன்னும் 9 ரன்கள் மட்டுமே தேவை.
அந்த சாதனையையும் அவர் இதே போட்டியில் செய்து இருக்கலாம். 40 ரன்கள் எடுத்து இருந்தால் அந்த சாதனையை முறியடித்து உலகிலேயே அதிக சர்வதேச டி20 ரன்கள் குவித்த வீரர் என்ற சாதனையை பாபர் அசாம் செய்து இருக்கக் கூடும். ஆனால், அந்த வாய்ப்பை தவறவிட்டார்.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 206 ரன்கள் எடுத்து இருந்தது. சயீம் அயூப் 57 பந்துகளில் 98 ரன்கள் எடுத்து இருந்தார். அடுத்து ஆடிய தென்னாப்பிரிக்க அணி 19.3 ஓவர்களில் எல்லாம் இலக்கை எட்டி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
தென்னாப்பிரிக்க அணியின் ரீஸா ஹென்ட்ரிக்ஸ் 63 பந்துகளில் 117 ரன்கள் குவித்தார். அவர் 7 ஃபோர் மற்றும் 10 சிக்ஸ் அடித்து மிரட்டி இருந்தார். ரஸ்ஸி வான் டர் டசன் 38 பந்துகளில் 66 ரன்கள் சேர்த்து இருந்தார். இதை அடுத்து மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் தென்னாப்பிரிக்கா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.


Click it and Unblock the Notifications