PAK vs SL Final: ராவல்பிண்டியில் பாகிஸ்தான் செய்த "மேஜிக்".. இலங்கையைச் சுருட்டி கோப்பையை வென்றது
ராவல்பிண்டி: சொந்த மண்ணில் நடைபெற்ற முத்தரப்பு டி20 தொடரின் இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் அணி அபார வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி ஒரு கட்டத்தில் வலுவான நிலையில் இருந்தும், திடீரென சீட்டுக்கட்டு போல சரிந்து 114 ரன்களுக்குச் சுருண்டது. எளிய இலக்கை விரட்டிய பாகிஸ்தான் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையைக் கைப்பற்றியது.
பாகிஸ்தான், இலங்கை, ஜிம்பாப்வே ஆகிய அணிகள் பங்கேற்ற முத்தரப்பு டி20 தொடரின் இறுதிப்போட்டி ராவல்பிண்டியில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலி ஆகா முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணிக்கு பதும் நிசாங்கா 11 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தாலும், இளம் வீரர் கமில் மிஷாரா பாகிஸ்தான் பந்துவீச்சை துவம்சம் செய்தார். பவர்-பிளேயில் அதிரடி காட்டிய அவர், குசல் மெண்டிஸ்ஸுடன் இணைந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். மிஷாரா 47 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 59 ரன்கள் குவித்துத் தனது இரண்டாவது அரைசதத்தைப் பதிவு செய்தார்.
இலங்கை அணி 10 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 81 ரன்கள் எடுத்து மிக வலுவான நிலையில் இருந்தது. 180 ரன்களுக்கு மேல் செல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், முகமது நவாஸ் மற்றும் ஷாஹீன் அப்ரிடி ஜோடி ஆட்டத்தையே தலைகீழாக மாற்றியது.
குசல் மெண்டிஸ் (14) ஆட்டமிழந்ததும், இலங்கை அணி மளமளவென சரிந்தது. 84/1 என்ற நிலையில் இருந்த அந்த அணி, அடுத்த 30 ரன்களை எடுப்பதற்குள் மீதமுள்ள 9 விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. ஷாஹீன் அப்ரிடி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். முகமது நவாஸ் 3 விக்கெட்டுகளைச் சாய்த்தார். அப்ரார் அகமது 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இறுதியில் இலங்கை அணி 19.1 ஓவர்களில் வெறும் 114 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. தசுன் ஷனகா, ஹசரங்கா, தீக்ஷனா என எவராலும் இரட்டை இலக்க ரன்களைக்கூடத் தொட முடியவில்லை. 115 ரன்கள் என்ற எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு, சாஹிப்சாதா பர்ஹான் (23 ரன்கள்) மற்றும் சைம் ஆயூப் (36 ரன்கள்) நல்ல தொடக்கம் கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 46 ரன்கள் சேர்த்தது.
பின்னர் வந்த கேப்டன் சல்மான் அலி ஆகா 14 ரன்களில் வெளியேறினாலும், அனுபவ வீரர் பாபர் அசாம் நங்கூரம் போல நிலைத்து நின்றார். இலங்கை பந்துவீச்சாளர்கள் நெருக்கடி கொடுக்க முயன்றாலும், பாபர் அசாம் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்து 37 ரன்கள் சேர்த்து பாகிஸ்தான் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.
பாகிஸ்தான் அணி 18.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 118 ரன்கள் எடுத்து, 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் முத்தரப்பு டி20 தொடரின் கோப்பையை பாகிஸ்தான் கைப்பற்றியது. பந்துவீச்சில் கலக்கிய முகமது நவாஸ் மற்றும் ஷாஹீன் அப்ரிடி ஆகியோர் பாகிஸ்தானின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தனர்.


Click it and Unblock the Notifications