கடைசி 10 பந்தில் 21 ரன்.. செம திரில்லர் மேட்ச்.. கடைசி ஓவரில் இலங்கையை வீழ்த்தி பாகிஸ்தான் வெற்றி
ராவல்பிண்டி: ராவல்பிண்டியில் நடைபெற்ற இலங்கை அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில், வனிந்து ஹசரங்காவின் அபாரமான ஆல்-ரவுண்ட் ஆட்டத்தையும் மீறி, பாகிஸ்தான் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் பாகிஸ்தான் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது. ஆகா சல்மானின் சதம் மற்றும் ஹாரிஸ் ராஃபின் சிறப்பான பந்துவீச்சு பாகிஸ்தானின் வெற்றிக்கு வித்திட்டது.
முதலில் பேட்டிங் செய்ய அழைக்கப்பட்ட பாகிஸ்தான் அணி, தொடக்கத்தில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 24-வது ஓவரில் 95 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தபோது, ஜோடி சேர்ந்த ஆகா சல்மான் மற்றும் ஹுசைன் தலத் அணியைச் சரிவிலிருந்து மீட்டனர். நிதானமாகவும், அதே சமயம் நேர்த்தியாகவும் ஆடிய இந்த ஜோடி, 5-வது விக்கெட்டுக்கு 138 ரன்கள் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்தது.

ஹுசைன் தலத் தனது முதல் ஒருநாள் அரைசதத்தைப் பதிவு செய்து 62 ரன்களில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் தொடர்ந்து சிறப்பாக ஆடிய ஆகா சல்மான், தனது இரண்டாவது ஒருநாள் சதத்தை பூர்த்தி செய்தார். இறுதிவரை ஆட்டமிழக்காமல் 105 ரன்கள் குவித்தார். கடைசி கட்டத்தில் முகமது நவாஸ் 36 ரன்கள் விளாச, பாகிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 299 ரன்கள் என்ற சவாலான இலக்கை நிர்ணயித்தது. இலங்கை தரப்பில் வனிந்து ஹசரங்கா சிறப்பாக பந்துவீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
300 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணிக்கு, தொடக்க ஆட்டக்காரர்களான பதும் நிசங்கா மற்றும் கமில் மிஷாரா சிறப்பான தொடக்கத்தை அளித்தனர். முதல் விக்கெட்டுக்கு வெறும் 70 பந்துகளில் 85 ரன்கள் சேர்த்து இந்த ஜோடி வலுவான அடித்தளமிட்டது. பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள் தொடக்கத்தில் 26 வைடுகளை வீசி ரன்களை வாரி வழங்கியது இலங்கை அணிக்குச் சாதகமாக அமைந்தது.
இந்நிலையில், பந்துவீச வந்த வேகப்பந்து வீச்சாளர் ஹாரிஸ் ராஃப், ஆட்டத்தின் போக்கையே மாற்றினார். தனது அனல் பறக்கும் வேகத்தால் இலங்கை பேட்டிங் வரிசையை அவர் நிலைகுலைய வைத்தார். கமில் மிஷாரா (38), குசல் மெண்டிஸ் (0) மற்றும் பதும் நிசங்கா (37) ஆகியோரை அடுத்தடுத்து வீழ்த்தி அதிர்ச்சி கொடுத்தார். இதனால் 85/0 என்ற நிலையில் இருந்த இலங்கை, 90/3 எனச் சரிவைச் சந்தித்தது.
அதன்பின் வந்த சரித் அசலங்கா மற்றும் சதீரா சமரவிக்ரமா நிதானமாக ஆடி அணியை மீட்க முயன்றனர். ஆனால், பாபர் அசாமின் அபாரமான ஸ்லிப் கேட்ச்சால் சமரவிக்ரமா (39) ஆட்டமிழந்தார். பின்னர் வந்த வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, இலங்கை அணி 210 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தோல்வியின் பிடியில் சிக்கியது.
இந்த நிலையில், தனி ஒருவனாக வனிந்து ஹசரங்கா போராடினார். கடைசி கட்ட பேட்ஸ்மேன்களுடன் இணைந்து அதிரடியாக ஆடிய அவர், 52 பந்துகளில் 59 ரன்கள் குவித்து இலங்கை அணியின் வெற்றி நம்பிக்கையை உயிர்ப்புடன் வைத்திருந்தார்.
கடைசி 10 பந்துகளில் 21 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ஹசரங்கா ஆட்டமிழந்தது ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தியது. இறுதியில், இலங்கை அணி 9 விக்கெட் இழப்பிற்கு 293 ரன்கள் மட்டுமே எடுத்து 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. பாகிஸ்தான் தரப்பில் சிறப்பாக பந்துவீசிய ஹாரிஸ் ராஃப் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி ஆட்டநாயகனாகத் திகழ்ந்தார்.


Click it and Unblock the Notifications