கொழும்பு : பாகிஸ்தான் - இலங்கை இடையே ஆன சூப்பர் 4 சுற்று ஒருநாள் போட்டி வியாழன் அன்று நடைபெற உள்ளது.
2023 ஆசிய கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இடம் பெறப் போகும் அணி எது என்பதை முடிவு செய்யும் போட்டியாக இது அமைய உள்ளது. இந்தப் போட்டியில் ஆடுகளம் குறித்து முன்னாள் வீரர்கள் கூறுகையில், பெரும்பாலும் சுழற் பந்துவீச்சுக்கே சாதகமாக இருக்கும் என கூறி உள்ளனர். இந்த தகவல் பாகிஸ்தான் அணிக்கு பாதகமாக அமைந்து இருக்கிறது.

ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றுக்கு இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் ஆகிய அணிகள் தகுதி பெற்றன. ஒவ்வொரு அணியும் மற்ற மூன்று அணிகளுடன் மோதி வருகின்றன.
இதில் வங்கதேசம் ஏற்கனவே, பாகிஸ்தான், இலங்கை அணிகளிடம் தோல்வி அடைந்து இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்து விட்டது. இந்திய அணி, பாகிஸ்தான், இலங்கை அணிகளை வீழ்த்தி இரண்டு வெற்றிகள் பெற்று இறுதிக்கு முன்னேறி இருக்கிறது.
இந்த நிலையில், பாகிஸ்தான், இலங்கை அணிகள் மோதும் சூப்பர் 4 சுற்று மற்றொரு இறுதிப் போட்டிக்கான அணியை தேர்வு செய்யும் முக்கிய போட்டியாக மாறி உள்ளது. இந்தப் போட்டி கொழும்பு மைதானத்தில் தான் நடைபெற உள்ளது.
அதே மைதானத்தில் பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிக்கு எதிராக இந்தியா ஆடிய போட்டிகளில் சுழற் பந்துவீச்சு பெருமளவில் போட்டியை தீர்மானித்தது. முக்கியமாக வேகப் பந்துவீச்சு ரன்களைக் கட்டுப்படுத்தவில்லை. விக்கெட் வீழ்ச்சிக்கும் சுழற் பந்துவீச்சே முக்கிய காரணமாக இருந்தது. இந்திய அணியின் சுழற் பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் இந்த இரண்டு போட்டிகளில் 5 மற்றும் 4 விக்கெட் சாய்த்துள்ளார்.
அதே போல, இந்திய அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற போட்டியில் இலங்கையின் சுழற் பந்துவீச்சாளர்கள் 10 விக்கெட்களையும் வீழ்த்தினர். அப்படியே பாகிஸ்தான் அணியை பார்த்தால் அந்த அணியில் ஒரு முழு நேர சுழற் பந்துவீச்சாளர் கூட இல்லை.
ஷதாப் கான், இப்திகார் அஹ்மத், ஆகா சல்மான் என மூன்று சுழற் பந்து வீச்சாளர்களும் ஆல்-ரவுண்டர்கள் தான். அவர்களில் ஷதாப் கான் மட்டுமே போட்டிகளில் 10 ஓவர்களை முழுமையாக வீசுகிறார். நடப்பு ஆசிய தொடரில் அவரின் பந்துவீச்சும் இலங்கை ஆடுகளங்களில் எடுபடவில்லை.
மறுபுறம், இலங்கையின் பந்துவீச்சு அபாரமாக உள்ளது. வெல்லாலகே, தீக்ஷனா, தனஞ்செயா டி சில்வா, அசலங்கா என் நான்கு சுழற் பந்து வீச்சாளர்களும் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் 9 முதல் 10 ஓவர்கள் வரை வீசி குறைவான ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து விக்கெட் வேட்டையும் நடத்தினர்.
இலங்கையின் பலமான சுழற் பந்துவீச்சை பாகிஸ்தான் அணி எப்படி எதிர்கொள்ளப் போகிறது என்பதே பலரின் கேள்வியாக உள்ளது. பாகிஸ்தான் அணி வேகப் பந்துவீச்சை மட்டுமே அதிகம் நம்பி உள்ளது. கொழும்பி ஆடுகளம் அதற்கும் ஒத்துழைக்கவில்லை என்பதால் அந்த அணி இக்கட்டான சூழ்நிலையில் உள்ளது. ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணிக்கு எதிராக இலங்கை அணி ஆடவே வாய்ப்பு அதிகம்.