PAK vs SL: உலகக்கோப்பையில் இருந்து வெளியேறிய பாகிஸ்தான்.. இலங்கை தோற்றாலும் மிரட்டல் ஆட்டம்!
கொழும்பு : 2026 டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்றில் பரபரப்புக்கு பஞ்சமில்லாத ஒரு போட்டி பல்லேகலே மைதானத்தில் அரங்கேறியது. பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினாலும், அரையிறுதிக்குச் செல்லும் பாகிஸ்தானின் கனவைத் தகர்த்து எறிந்தது.
இந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்து 212 ரன்கள் குவித்தது. அரையிறுதிக்கு முன்னேற வேண்டுமானால் இலங்கை அணியை 147 ரன்களுக்குள் கட்டுப்படுத்த வேண்டும் என்ற நிலையில் பாகிஸ்தான் பந்துவீச்சைத் தொடங்கியது. ஆனால், இலங்கை கேப்டன் தசுன் ஷனகா மற்றும் இளம் வீரர் பவன் ரத்னாயகே ஆகியோரின் அதிரடி ஆட்டத்தால் பாகிஸ்தானின் கனவு சுக்குநூறானது.

பாகிஸ்தான் பேட்டிங் அதிரடி
முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணிக்குத் தொடக்க வீரர்கள் சஹிப்சாதா ஃபர்ஹான் மற்றும் ஃபக்கர் ஜமான் ஆகியோர் சிறப்பான அடித்தளம் அமைத்துக் கொடுத்தனர். ஃபக்கர் ஜமான் 42 பந்துகளில் 84 ரன்கள் விளாசினார். மறுமுனையில் சஹிப்சாதா ஃபர்ஹான் 60 பந்துகளில் 100 ரன்கள் குவித்து சதம் அடித்தார். இறுதியில் பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 212 ரன்கள் குவித்தது.
இலங்கை பேட்டிங்
213 ரன்கள் என்ற இலக்கைத் துரத்திய இலங்கை அணிக்குத் தொடக்கம் சரியாக அமையவில்லை. பதும் நிசங்கா 3 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆனால், இளம் வீரர் பவன் ரத்னாயகே பொறுப்புடன் விளையாடி 37 பந்துகளில் 58 ரன்கள் குவித்தார். அப்ரார் அகமதுவின் சிறப்பான பந்துவீச்சு ஒரு கட்டத்தில் பாகிஸ்தானுக்கு நம்பிக்கையை அளித்தது. அவர் 4 ஓவர்களில் 23 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
தசுன் ஷனகாவின் மிரட்டல் ஆட்டம்
இலங்கை அணி 147 ரன்களைக் கடந்தபோதே பாகிஸ்தானின் அரையிறுதி வாய்ப்பு பறிபோனது. இருப்பினும், வெற்றிபெற வேண்டும் என்ற வெறியுடன் இலங்கை கேப்டன் தசுன் ஷனகா அதிரடியாக விளையாடினார். கடைசி ஓவரில் வெற்றிக்கு 28 ரன்கள் தேவைப்பட்டது. ஷாஹீன் அப்ரிடி வீசிய அந்த ஓவரின் முதல் மூன்று பந்துகளில் தொடர்ந்து ஹாட்ரிக் சிக்ஸர்களை விளாசி மைதானத்தையே அதிர வைத்தார் ஷனகா.
கடைசி 2 பந்துகளில் 6 ரன்கள் தேவைப்பட்டது. 5வது பந்தில் ஷனகா ரிவர்ஸ் ஸ்கூப் ஷாட் ஆட முயன்று பந்தை மிஸ் செய்தார். கடைசி பந்தில் ஒரு யார்க்கரை வீசி ஷாஹீன் அப்ரிடி பாகிஸ்தானின் வெற்றியை உறுதி செய்தார். ஷனகா 31 பந்துகளில் 8 சிக்ஸர்களுடன் 76 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
கண்ணீருடன் வெளியேறிய ஷனகா
வெற்றியின் விளிம்பு வரை வந்து தோல்வியடைந்ததால் இலங்கை கேப்டன் தசுன் ஷனகா மிகுந்த ஏமாற்றமடைந்தார். போட்டி முடிந்ததும் கண்களை மூடித் தனது வேதனையை வெளிப்படுத்திய அவருக்குத் துனித் வெல்லாலகே ஆறுதல் கூறினார். பாகிஸ்தான் அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாலும், அரையிறுதிக்குத் தகுதி பெற முடியாமல் தொடரை விட்டு வெளியேறியது. நியூசிலாந்து அணி ரன் ரேட் அடிப்படையில் அரையிறுதிக்கு முன்னேறியது.
கடைசி ஓவரில் ஷனகா ரிவர்ஸ் ஸ்கூப் ஆடியதைப் பார்த்த இலங்கை ஜாம்பவான் லசித் மலிங்கா கடும் கோபமடைந்தார். ஆஃப் சைடில் இடம் இருந்தும் ஏன் ரிவர்ஸ் ஸ்கூப் ஆடினார் என்று அவர் கேள்வி எழுப்பும் காட்சிகள் வெளியாயின. இருப்பினும், இந்தப் போட்டி ரசிகர்களுக்கு ஒரு சிறந்த விருந்தாக அமைந்தது. சூப்பர் 8 குரூப் 2 பிரிவில் பாகிஸ்தான் வெளியேறிய நிலையில் நியூசிலாந்து அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications