கொழும்பு : தற்போதைய பாகிஸ்தான் அணி தான் சர்வதேச ஒருநாள் தரவரிசையில் முதல் இடத்தில் இருக்கிறது.
ஆஸ்திரேலியா, இந்தியா ஆகிய அணிகள் கூட இரண்டாம், மூன்றாம் இடத்தில் தான் இருக்கின்றன. இந்த நிலையில், ஆசிய கோப்பை இறுதிப் போட்டிக்கு பாகிஸ்தான் அணியால் முன்னேற முடியவில்லை.

இந்திய அணியிடம் அடைந்த இமாலய தோல்வியில் இருந்தே அந்த அணி இன்னும் மீண்டு வரவில்லை. அத்துடன் இலங்கை அணிக்கு எதிராக சூப்பர் 4 சுற்றில் தோல்வி அடைந்து இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பையும் இழந்ததால், பாகிஸ்தான் வீரர்கள் மீது ஒட்டுமொத்த பாகிஸ்தானும் கடும் கோபத்தில் உள்ளது.
முன்னதாக ஆசிய கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி வலுவான அணியாகத் தான் இருந்தது. குரூப் சுற்றில் கூட இந்திய அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பாக பந்து வீசி 266 ரன்களுக்கு இந்திய அணியை சுருக்கி இருந்தது. ஆனால், அந்தப் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது.
அந்தப் போட்டிக்கு பின் இந்திய அணியை மீண்டும் சூப்பர் 4 சுற்றில் சந்தித்தது. முந்தைய போட்டி போலவே இந்திய அணி தடுமாறும் என எண்ணிய பாகிஸ்தான் அணிக்கு ரோஹித் சர்மா அணி வேறு அதிர்ச்சி வைத்தியம் அளித்தது. துவக்கம் முதலே பாகிஸ்தான் அணியின் முக்கிய பந்து வீச்சாளர்களை தாக்கி ரன் குவித்து அவர்களை நிலைகுலையச் செய்தது இந்திய அணி.
அந்தப் போட்டியில் இந்தியா 356 ரன்கள் எடுக்க, பாகிஸ்தான் அணி 128 ரன்கள் மட்டுமே எடுத்தது. 228 ரன்கள் வித்தியாசத்தில் ஒரு இமாலய தோல்வியை பதிவு செய்தது. தோல்வி அடைந்தால் கூட போராடி தோல்வி அடையக் கூடாதா? என அந்த நாட்டு ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் கோபம் அடைந்தனர்.
அப்போது முதலே பாகிஸ்தான் நாட்டின் சமூக ஊடகங்கள் மற்றும் தொலைக்காட்சிகள் பாகிஸ்தான் வீரர்களை அக்குவேறு, ஆணி வேறாக பிரித்து மேய்ந்து கொண்டிருந்தது. அதற்கு முந்தைய தினம் வரைக்கும் அதே நபர்கள் தான் பாகிஸ்தான் வீரர்களை உலகிலேயே சிறந்த வீரர்கள் என கூறினார்கள். ஆனால், எல்லாமே ஒரு போட்டியில் மாறியது.
இந்த நிலையில், இலங்கை அணியை வீழ்த்தி இறுதிப் போட்டியில் இந்திய அணியை மீண்டும் சந்தித்து அதில் இந்தியாவை வீழ்த்தி கோப்பையை வென்றால் இந்த விமர்சனங்களில் இருந்து தப்பிக்கலாம் என்ற நிலை இருந்தது.
இலங்கை அணிக்கு எதிரான போட்டி மழை காரணமாக 42 ஓவர்களாக குறைக்கப்பட்டது. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 252 ரன்கள் குவித்தது. இலங்கை அணியை எளிதாக பாகிஸ்தான் வீழ்த்தும் என்றே பலரும் எண்ணிய நிலையில், பந்து வீச்சில் சொதப்பியது பாகிஸ்தான்.
இலங்கை பேட்ஸ்மேன்களுக்கு ரன்களை வாரி இறைக்கவே அந்த அணி கடைசி நேரத்தில் விக்கெட்களை இழந்தாலும் கடைசி ஓவர் வரை போட்டியை கொண்டு சென்று 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இறுதிப் போட்டிக்கும் இலங்கை முன்னேறி இருக்கிறது.
இதை சற்றும் எதிர்பாராத பாகிஸ்தான் அணி தற்போது கதிகலங்கிப் போய் இருக்கிறது. ஏற்கனவே, இந்திய அணிக்கு எதிரான பெரிய தோல்வி, இப்போது கடந்த காலங்களில் பெரிய அணிகளை வீழ்த்தாத இலங்கை அணிக்கு எதிராக முக்கிய போட்டியில் தோல்வி என இரண்டு அடிகளை வாங்கி விட்டது.
ஏற்கனவே, கோபத்தில் இருக்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்கள் உச்சபட்ச வெறுப்பில் உள்ளனர். சமூக ஊடகங்களை திறந்தாலே அது தெரியும். இந்த நிலையில், பாகிஸ்தான் வீரர்கள் ஆசிய கோப்பை தொடரில் இருந்து வெளியேறிய நிலையில், தங்கள் நாட்டுக்கு திரும்ப வேண்டும்.
ஆனால், அவர்கள் சில நாட்கள் இலங்கையில் இருந்து விட்டு தான் பாகிஸ்தான் திரும்புவார்கள் என கூறப்படுகிறது. அந்த அளவுக்கு அவர்கள் அச்சத்தில் உள்ளனர். மனதளவிலும் அவர்கள் உடைந்து போயுள்ளனர்.