அபுதாபி: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் சூப்பர் 4 சுற்று ஆட்டத்தில் இன்று இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் மிக முக்கியமான ஆட்டத்தில் மோதுகின்றன. ஏற்கனவே இரு அணிகளும் தாங்கள் மோதிய முதல் சூப்பர் 4 சுற்று ஆட்டத்தில் தோல்வியை தழுவியது.
இந்த நிலையில் இந்த போட்டி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறி இருக்கின்றது. இந்தப் போட்டியில் வெல்லும் அணி, இறுதிப் போட்டிக்கு செல்லும் வாய்ப்பு தக்க வைத்துக் கொள்ளும். தோல்வி அடையும் அணி தொடரை விட்டு வெளியேற அதிக வாய்ப்பு இருக்கிறது.

அபுதாபியில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் சல்மான் ஆகா முதலில் தாங்கள் பந்து வீசுவதாக தெரிவித்தார். ஆடுகளம் பார்ப்பதற்கு நன்றாக இருப்பதாகவும் ஆடுகளத்தின் தன்மை மாறாது என்பதால் இந்த முடிவை தாங்கள் எடுத்திருப்பதாக கூறினார்.
இந்தியாவுக்கு எதிராக நாங்கள் நல்ல தொடக்கத்தை பெற்றோம் என்று குறிப்பிட்ட சல்மான் ஆகா, ஆனால் அதனை சரியாக முடிக்கவில்லை என்று கூறினார். இலங்கை அணி எப்போதுமே ஒரு நல்ல அணி என்றாலும், நாங்களும் நல்ல அணி தான் என்று சுட்டிக்காட்டினார். நாங்கள் கடந்த காலத்தை பற்றி யோசிக்க மாட்டோம்.
இன்று என்ன நடக்கிறதோ அதைப் பற்றித்தான் யோசிப்போம் என்றும் சல்மான் கூறியுள்ளார். மேலும் தங்களது அணியில் எந்த ஒரு மாற்றத்தையும் செய்யவில்லை என சல்மான் அகா தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து பேசிய இலங்கை அணி கேப்டன் அஸ் லங்கா, நாங்களும் முதலில் பந்துவீச்சை தான் தேர்வு செய்திருப்போம்.
ஆடுகளம் நன்றாக இருக்கின்றது. முதலில் பேட்டிங் செய்வது பற்றி கவலை இல்லை. நல்ல கிரிக்கெட்டை விளையாடி சில விஷயங்களில் முன்னேற்றம் அடைய வேண்டும் என்று நினைக்கின்றோம். கடைசி ஓவர்களில் பேட்டிங் மற்றும் பவுலிங் நாங்கள் கொஞ்சம் முன்னேற்றம் காட்ட வேண்டும் என்று நினைக்கின்றோம். எங்கள் அணியில் இன்று இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கிறது. தீக்ஷனா மற்றும் கருணரத்தினே ஆகியோர் அணிக்குள் வந்திருக்கிறார்கள். எங்களுக்கு கூடுதலாக ஒரு பவுலர் தேவைப்படுகிறது என்பதால் இந்த முடிவை நாங்கள் எடுத்திருக்கிறோம் என்று அசலங்கா கூறினார்.