PAK vs SL: விராட் கோலியின் சாதனையை முறியடித்த பாகிஸ்தான் வீரர்.. கிறிஸ் கெயில் ரெக்கார்டும் சமன்
கொழும்பு: 2026 டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர் சஹிப்சாதா ஃபர்ஹான், ஒரு தொடரில் அதிக ரன்கள் குவித்த விராட் கோலியின் சாதனையை முறியடித்து புதிய வரலாறு படைத்துள்ளார். பல்லேகலேயில் சனிக்கிழமை இலங்கை அணிக்கு எதிராக நடைபெற்ற சூப்பர் 8 சுற்றின் கடைசிப் போட்டியில் சஹிப்சாதா ஃபர்ஹான் அபாரமாக விளையாடி சதம் அடித்தார். 60 பந்துகளில் 100 ரன்கள் குவித்த அவர், இந்த உலகக் கோப்பைத் தொடரில் தனது இரண்டாவது சதத்தைப் பதிவு செய்தார்.
விராட் கோலி சாதனை முறியடிப்பு
இலங்கைக்கு எதிரான இந்த சதத்தின் மூலம், நடப்பு டி20 உலகக் கோப்பைத் தொடரில் அவர் 76.60 என்ற சராசரியுடன் ஒட்டுமொத்தமாக 383 ரன்களைக் குவித்துள்ளார். முன்னதாக 2014ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பையில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி 319 ரன்கள் குவித்ததே, ஒரு டி20 உலகக் கோப்பைத் தொடரில் ஒரு வீரர் அடித்த அதிகபட்ச ரன்களாக இருந்தது. கடந்த 12 ஆண்டுகளாக முறியடிக்கப்படாமல் இருந்த விராட் கோலியின் இந்தச் சாதனையை சஹிப்சாதா ஃபர்ஹான் தற்போது முறியடித்துள்ளார்.

ஒரு டி20 உலகக் கோப்பை தொடரில் அதிக ரன்கள் குவித்தவர்கள்:
சஹிப்சாதா ஃபர்ஹான் (பாகிஸ்தான்) - 383 ரன்கள் (2026)
விராட் கோலி (இந்தியா) - 319 ரன்கள் (2014)
திலகரத்னே தில்ஷான் (இலங்கை) - 317 ரன்கள் (2009)
பாபர் அசாம் (பாகிஸ்தான்) - 303 ரன்கள் (2021)
மகிளா ஜெயவர்தனே (இலங்கை) - 302 ரன்கள் (2010)
கிறிஸ் கெயில் சாதனை சமன்
அதுமட்டுமின்றி, டி20 உலகக் கோப்பை வரலாற்றில் ஒன்றுக்கும் மேற்பட்ட சதங்களை அடித்த இரண்டாவது வீரர் என்ற பெருமையையும் சஹிப்சாதா ஃபர்ஹான் பெற்றுள்ளார். இதற்கு முன் வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஜாம்பவான் கிறிஸ் கெயில் இரண்டு சதங்களை அடித்திருந்தார்.
ஆனால், கிறிஸ் கெயில் 2007 மற்றும் 2016 என இரண்டு வெவ்வேறு உலகக் கோப்பைத் தொடர்களில் தலா ஒரு சதம் அடித்திருந்தார். சஹிப்சாதா ஃபர்ஹானோ ஒரே உலகக் கோப்பைத் தொடரில் இரண்டு சதங்களை விளாசி, இந்தச் சாதனையைச் செய்த முதல் பேட்டர் என்ற அரிய பெருமையைத் தனதாக்கியுள்ளார்.
பாகிஸ்தான் கேப்டன் வேதனை
சஹிப்சாதா ஃபர்ஹான் தனி ஆளாகப் போராடி ரன் குவித்துச் சாதனைகளைப் படைத்தாலும், பாகிஸ்தான் அணி இந்தத் தொடரில் அரையிறுதிக்கு முன்னேறாமல் வெளியேறியது அந்நாட்டு ரசிகர்களுக்குப் பெரும் ஏமாற்றத்தை அளித்தது. கடந்த 2022ஆம் ஆண்டு இங்கிலாந்திடம் இறுதிப்போட்டியில் தோல்வியடைந்த பாகிஸ்தான், அதன்பிறகு தொடர்ந்து இரண்டாவது முறையாக அரையிறுதிக்குச் செல்லாமல் வெளியேறியுள்ளது.
இந்தத் தோல்வி குறித்துப் பேசிய பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலி ஆகா, "நெருக்கடியான நேரங்களில் நாங்கள் எப்படி விளையாடுகிறோம் என்பதை இன்னும் மேம்படுத்த வேண்டும். அழுத்தம் அதிகரிக்கும் போது எங்களின் முடிவெடுக்கும் திறனும் சிறப்பாக இருக்க வேண்டும். தற்போது அதுதான் எங்கள் அணியின் முக்கியப் பிரச்சினையாக உள்ளது.
உலகக் கோப்பை போன்ற பெரிய தொடர்களில் எப்போதும் வீரர்களுக்கு நெருக்கடி இருக்கும். அந்த நெருக்கடியான தருணங்களில் நாம் எடுக்கும் முடிவுகள் சரியாக இல்லையென்றால், போட்டியின் முடிவுகள் இப்படித்தான் ஏமாற்றமாக அமையும்" என்று வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications