கொழும்பு : இலங்கை - பாகிஸ்தான் அணிகள் இடையே ஆன ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்று போட்டி கொழும்பில் நடைபெற்றது.
இந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணியின் செயல்பாடுகள் தொடர்ந்து சொதப்பலாகவே இருந்தது. பேட்டிங்கில் ஓரளவு ரன் எடுத்தாலும், பந்துவீச்சில் சொதப்பியது.

முதலில் பேட்டிங் செய்து 42 ஓவர்களில் 252 ரன்கள் குவித்தது பாகிஸ்தான். அந்த அணியின் முகமது ரிஸ்வான் அதிகபட்சமாக 86 ரன்கள் எடுத்தார். அடுத்து இலங்கை அணி சேஸ் செய்ய வந்தது. துவக்கம் முதலே பாகிஸ்தான் அணி ரன்களை வாரி இறைத்தது.
சில கேட்ச் நழுவல்கள் மற்றும் பீல்டிங் சொதப்பல்களும் சேர்ந்து கொள்ள அந்த அணியின் கேப்டன் பாபர் ஆசாம் நொந்து போனார். இதில் உச்சகட்டமாக அந்த அணியின் வைஸ் கேப்டன் ஷதாப் கான் செய்த காரியம் அமைந்தது.
37வது ஓவரை ஷஹீன் ஷா அப்ரிடி வீசினார். அவர் ஏற்கனவே இந்தப் போட்டியில் விக்கெட் வீழ்த்த முடியாமல், ரன்களை வேறு வாரிக் கொடுத்த விரக்தியில் இருந்தார். அந்த நிலையில், அந்த ஓவரின் போது அசலங்கா அடித்த பந்து ஒன்று ஷதாப் கான் இருக்கும் திசைக்கு வந்தது.
ஷதாப் கான் அந்த பந்தை பிடித்த போதே அசலங்கா ரன் ஓடும் முடிவை கை விட்டு கிரீஸில் நின்று விட்டார். ஷதாப் கான் அதை பார்த்து நிதானமாக பந்தை விக்கெட் கீப்பருக்கு வீசி இருக்கலாம். ஆனால், அவர் ரன் அவுட் செய்கிறேன் என அவசரப்பட்டு பந்தை ஸ்டம்ப்புகளை நோக்கி வீசினார்.
ஆனால், பந்து ஸ்டம்பை தாண்டி சென்றது. அங்கே எந்த பீல்டரும் இல்லை. அதனால் பந்து வேகமாக ஓடிச் செல்ல, அசலங்கா அதை பயன்படுத்தி இரண்டு ரன்களை எடுத்து விட்டார். ஷதாப் கான் ஓவர்த்ரோ செய்ததை கண்டு கண்களில் அனலைக் கக்கினார் பாபர் ஆசாம். ஷஹீன் ஷா அப்ரிடி அதை விட கடும் கோபத்தில் இருந்தார்.
இலங்கை அணி வெற்றிக்கு அருகே சென்று கொண்டிருந்த போது தேவையே இல்லாமல் ஓவர்த்ரோ செய்து சொதப்பினார் வைஸ் கேப்டன் ஷதாப் கான். இறுதியில் கடைசி ஓவரில் 8 ரன்கள் தேவை என்ற நிலையில், கடைசி இரண்டு பந்துகளில் மட்டும் 6 ரன்களை எடுத்தார் அசலங்கா. இலங்கை அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி ஆசிய கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.