அபுதாபி: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் சூப்பர் 4 சுற்று ஆட்டத்தில் இலங்கை அணிக்கு எதிரான வாழ்வா சாவா ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி இன்று சிறப்பாக பந்து வீசியது. இரு அணிகளும் தங்களுடைய முதல் சூப்பர் 4 ஆட்டத்தில் தோல்வியை தழுவியதால், இந்த போட்டி ஒரு நாக் அவுட் போல் மாறிவிட்டது.
இதனால் கண்டிப்பாக வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இரண்டு அணிகளும் களமிறங்கினர். குறிப்பாக பாகிஸ்தான் அணி இந்தியாவுக்கு எதிராக மோசமாக பந்து வீசியதாக அந்நாட்டு ரசிகர்கள் குற்றம் சாட்டினர். குறிப்பாக ஷாஹீன் அப்ரிடி பந்துவீச்சில் சோபிக்க தவறி வருவதாக விமர்சனம் இருந்தது.

இந்த நிலையில் இந்தியாவிலும் ஏற்பட்ட அவமானத்தை துடைக்கும் விதமாக இன்று பாகிஸ்தான் வீரர்கள் ஆக்ரோஷமாக பந்து வீசினர். குறிப்பாக பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் ஷாகின் ஆபிரடி ஆட்டத்தின் இரண்டாவது பந்தில், இலங்கை வீரர் குசல் மெண்டீசை டக்கவுட் ஆக்கினார்.
இதேபோன்று மற்றொரு தொடக்க வீரரான நிஷாங்காவை எட்டு ரன்களில் ஆட்டமிழக்க வைத்தார். அதிரடியாக விளையாடிய குசல் பெரேரா 12 ரன்களில் வெளியேறினார். கேப்டன் அசலங்கா நிதானமாக விளையாடி 19 பந்துகளில் 20 ரன்கள் சேர்க்க, தசுன் சனக்கா டக் அவுட் ஆனார்.
ஒரு பக்கம் விக்கெட்டுகள் சரிந்தாலும் கமிண்டு மெண்டிஸ் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 44 பந்துகளில் அரை சதம் எடுத்த நிலையில் ஷாகின் அப்ரிடி பந்து வீச்சில் ஆட்டம் இழந்தார். இதனால் பாகிஸ்தான் அணியின் கையே ஓங்கி இருந்தது. இறுதியில் இலங்கை வீரர் ஹசரங்கா 15 ரன்கள் எடுக்க இலங்கை அணி 20 ஓவர் முடிவில் எட்டு விக்கெட் இழப்பிற்கு 133 ரன்கள் மட்டுமே எடுத்தது.
பாகிஸ்தான் பந்துவீச்சில் ஷாகின் அப்ரிடி மூன்று விக்கெட்டுகளும், ஹாரிஸ் ரவுப் மற்றும் ஹுசைன் தலாட் தலா இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். அப்ரார் அகமது நான்கு ஓவர்கள் வீசி வெறும் எட்டு ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.