Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பாகிஸ்தான் தொடரில் திடீர் திருப்பம்.. இலங்கை கேப்டன் அசலங்கா, அசிதா பெர்னாண்டோ நாடு திரும்பினர்

ராவல்பிண்டி: பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணியின் கேப்டன் சரித் அசலங்கா மற்றும் வேகப்பந்து வீச்சாளர் அசிதா பெர்னாண்டோ ஆகியோர் "உடல்நலக்குறைவு" காரணமாக உடனடியாக நாடு திரும்புவதாக இலங்கை கிரிக்கெட் வாரியம் (SLC) அறிவித்துள்ளது. இந்தத் திடீர் விலகல், அணிக்குள் நிலவி வந்த பாதுகாப்பு அச்சம் குறித்த முந்தைய செய்திகளுடன் சேர்ந்து, கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உண்மையில் உடல்நலக்குறைவா? அல்லது பாகிஸ்தான் நாட்டில் நடந்த சம்பவங்களால் ஏற்பட்ட உயிர் பயமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி ஒருநாள் தொடரில் ஆடி முடித்துள்ளது. அடுத்து முத்தரப்பு டி20 தொடர் துவங்க உள்ளது. இந்த நிலையில், ஒருநாள் தொடரின் இடையே இஸ்லாமாபாத்தில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தால் இலங்கை வீரர்கள் உயிர் பயத்துக்கு ஆளானார்கள். பலரும் உடனடியாக இலங்கை திரும்ப வேண்டும் என அழுத்தம் கொடுத்தனர். ஆனால், இலங்கை கிரிக்கெட் வாரியம் அவர்களுக்கு மறைமுக மிரட்டல் விடுத்து ஒருநாள் தொடரில் ஆட வைத்தது.

PAK vs SL T20 Sri Lanka Captain Charith Asalanka and Asitha Fernando Return Home Citing Illness

அடுத்து முத்தரப்பு டி20 தொடர் துவங்க இருக்கும் நிலையில், இலங்கை கிரிக்கெட் வாரியம் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் (X) தளத்தில் வெளியிட்ட அறிக்கையில், "கேப்டன் சரித் அசலங்கா மற்றும் அசிதா பெர்னாண்டோ ஆகியோர் உடல்நலக்குறைவு காரணமாக பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தில் இருந்து விலகி, தாயகம் திரும்புகின்றனர்" என்று குறிப்பிட்டுள்ளது. ஆனால், அவர்களுக்கு என்ன விதமான உடல்நலக்குறைவு என்பது குறித்த எந்த விவரத்தையும் வாரியம் வெளியிடவில்லை.

மேலும், பாகிஸ்தான் மற்றும் ஜிம்பாப்வே அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு டி20 தொடரில் இருந்தும் இருவரும் பங்கேற்க மாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. "எதிர்காலப் போட்டிகளுக்கு முன்பு அவர்கள் முழுமையாக குணமடையவும், முறையான மருத்துவ கவனிப்பைப் பெறவும் இந்த முன்னெச்சரிக்கை முடிவு எடுக்கப்பட்டுள்ளது" என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

உண்மையில் நடந்தது என்ன?

ஒரு வாரத்திற்கு முன்புதான், பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள மாவட்ட நீதிமன்றம் அருகே நடந்த தாக்குதலில் 12 பேர் பலியானார்கள். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, இலங்கை அணியைச் சேர்ந்த எட்டு வீரர்கள் தங்கள் பாதுகாப்பு குறித்து அச்சம் தெரிவித்து, உடனடியாக நாடு திரும்ப விரும்புவதாகச் செய்திகள் வெளியாகின.

ஆனால், அப்போது தலையிட்ட இலங்கை கிரிக்கெட் வாரியம், "திட்டமிட்டபடி அனைத்து வீரர்களும், பயிற்சியாளர்களும், நிர்வாகிகளும் சுற்றுப்பயணத்தைத் தொடர வேண்டும்" என்று கண்டிப்புடன் அறிவுறுத்தியது. மேலும், வாரியத்தின் உத்தரவை மீறி யாரேனும் சுற்றுப்பயணத்தைப் பாதியில் கைவிட்டால், அவர்கள் மீது "முறையான விசாரணை" நடத்தப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்தச் சூழலில், தற்போது கேப்டனே "உடல்நலக்குறைவு" என்ற காரணத்தால் நாடு திரும்புவது, வீரர்களின் பாதுகாப்பு அச்சம் தொடர்பான முந்தைய செய்திகளுக்கு வலு சேர்ப்பதாக அமைந்துள்ளது.

இலங்கை அணியின் கேப்டன் யார்?

ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் பாகிஸ்தானிடம் முழுமையாக இழந்த இலங்கை அணி, அடுத்ததாக முத்தரப்பு டி20 தொடரில் பங்கேற்க உள்ளது. அசலங்கா இல்லாத நிலையில், அனுபவ வீரரான தசுன் ஷனகா அணியை வழிநடத்துவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அணிக்கு வலு சேர்க்கும் விதமாக, பாகிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் அறிமுகமான டாப்-ஆர்டர் பேட்ஸ்மேன் பவன் ரத்நாயகே, டி20 அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அறிமுகப் போட்டியில் அவர் 37 பந்துகளில் 32 ரன்கள் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான், இலங்கை மற்றும் ஜிம்பாப்வே ஆகிய மூன்று அணிகளும் பங்கேற்கும் இந்த முத்தரப்புத் தொடர் செவ்வாய்க்கிழமை தொடங்குகிறது. அனைத்துப் போட்டிகளும் ராவல்பிண்டியில் நடைபெறுகின்றன. அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பைக்குத் தயாராகும் வகையில் இந்தத் தொடர் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. கேப்டன் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் விலகியுள்ள நிலையில், இலங்கை அணி இந்தத் தொடரில் எப்படிச் செயல்படும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Story first published: Monday, November 17, 2025, 22:40 [IST]
Other articles published on Nov 17, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+