Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

PAK vs UAE: தப்பிப் பிழைத்து.. சூப்பர் 4-க்குள் நுழைந்த பாகிஸ்தான்.. அமீரகத்துக்கு எதிராக வெற்றி

துபாய்: 2025 ஆசியக் கோப்பை தொடரில் ஐக்கிய அரபு அமீரக அணிக்கு எதிராக பாகிஸ்தான் தடுமாறி வென்றது. களத்திற்கு வெளியே நடந்த சர்ச்சைகளால் பெரும் அழுத்தத்துடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி, ஆசிய கோப்பையின் மிக முக்கியமான 'வாழ்வா சாவா' ஆட்டத்தில் ஐக்கிய அரபு அமீரகம் (UAE) அணியை 41 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, சூப்பர் 4 சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது.

இந்த போட்டியில் வெற்றி கிடைத்தாலும், பாகிஸ்தானின் பேட்டிங் மீண்டும் ஒருமுறை தடுமாறியது, அந்த அணிக்கு பெரும் தலைவலியாக அமைந்துள்ளது. ஃபக்கர் ஜமான்னின் அரைசதம் மற்றும் ஷஹீன் அஃப்ரிடியின் கடைசி நேர அதிரடியே பாகிஸ்தானை ஒரு கவுரவமான ஸ்கோரை எட்ட உதவியது.

PAK vs UAE match result Fakhar Zaman and Shaheen Afridi Rescue Pakistan - Qualify for Super 4

டாஸ் மற்றும் ஆட்டத்தின் போக்கு:

துபாய் சர்வதேச மைதானத்தில் நடந்த இந்தப் போட்டியில், டாஸ் வென்ற ஐக்கிய அரபு அமீரக அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இந்த முடிவு அவர்களுக்கு ஆரம்பத்திலேயே பலனளித்தது. பாகிஸ்தான் அணி பேட்டிங்கைத் தொடங்கிய முதல் ஓவரிலேயே சயிம் அயூப் (0) ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தார். மூன்றாவது ஓவரில், மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான சாஹிப்சாதா ஃபர்ஹான்னும் (5) வெளியேற, பாகிஸ்தான் அணி 9 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து பெரும் சரிவைச் சந்தித்தது.

ஃபக்கர் ஜமான், ஷஹீனின் போராட்டத்தால் மீண்ட பாகிஸ்தான்:

இந்த இக்கட்டான நிலையில், அனுபவ வீரர் ஃபக்கர் ஜமான் ஒரு முனையில் நங்கூரம் போல நின்று, அணியை சரிவிலிருந்து மீட்கப் போராடினார். நிதானமாக ஆடிய அவர், 36 பந்துகளில் 2 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 50 ரன்கள் எடுத்து, அணியின் ஸ்கோர் உயர முக்கிய காரணமாக அமைந்தார். ஆனால், கேப்டன் சல்மான் அகா (20), ஹசன் நவாஸ் (3), குஷ்தில் (4) என மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் மீண்டும் ஒருமுறை சொதப்பினர்.

ஒரு கட்டத்தில், பாகிஸ்தான் 120 ரன்களை எட்டுவதே கடினம் என்று தோன்றியபோது, பந்துவீச்சாளரான ஷஹீன் அஃப்ரிடி பேட்டிங்கில் அதிரடி காட்டினார். வெறும் 14 பந்துகளைச் சந்தித்த அவர், 3 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 29 ரன்கள் விளாசி, அணியின் ஸ்கோரை 146 ஆக உயர்த்தினார். ஐக்கிய அரபு அமீரகம் சார்பில், ஜுனைத் சித்திக் 4 விக்கெட்டுகளையும், சிம்ரன்ஜீத் சிங் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தி மிரட்டினர்.

பந்துவீச்சில் பதிலடி கொடுத்த பாகிஸ்தான்:

147 ரன்கள் என்ற சவாலான இலக்கைத் துரத்திய ஐக்கிய அரபு அமீரக அணிக்கு, நல்ல தொடக்கம் கிடைத்தது. ஆனால், பாகிஸ்தானின் பந்துவீச்சுக்கு முன்னால் அவர்களால் நீண்ட நேரம் தாக்குப்பிடிக்க முடியவில்லை. ராகுல் சோப்ரா (35) மற்றும் துருவ் பராஷர் (20) ஆகியோர் மட்டுமே ஓரளவுக்குப் போராடினர்.

பாகிஸ்தான் சார்பில், சுழற்பந்து வீச்சாளர் அப்ரார் அஹ்மத் 4 ஓவர்களில் வெறும் 13 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தி, ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தார். ஷஹீன் அஃப்ரிடி மற்றும் ஹரிஸ் ரவுஃப் ஆகியோரும் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இறுதியாக, ஐக்கிய அரபு அமீரக அணி 17.4 ஓவர்களில் 105 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 41 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

இந்த வெற்றியின் மூலம், பாகிஸ்தான் அணி 'குரூப் ஏ' பிரிவிலிருந்து இந்தியாவைத் தொடர்ந்து, இரண்டாவது அணியாக சூப்பர் 4 சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது. பேட்டிங்கில் உள்ள பலவீனங்களை சரிசெய்யாவிட்டால், சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தான் அணிக்கு கடும் சவால்கள் காத்திருக்கும் என்பதே கிரிக்கெட் விமர்சகர்களின் கருத்தாக உள்ளது.

Story first published: Thursday, September 18, 2025, 6:30 [IST]
Other articles published on Sep 18, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+