Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்த 2 கேட்ச் பிடிச்சுருந்தா பாகிஸ்தான் காலி.. வாய்ப்பை கோட்டை விட்ட UAE.. பைனலுக்கு போன பாக்.

ஷார்ஜா: முத்தரப்பு டி20 தொடரில் ஐக்கிய அரபு அமீரக அணியை வீழ்த்தி பாகிஸ்தான் வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்த தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. ஐக்கிய அரபு அமீரக அணியின் தொடர்ச்சியான ஃபீல்டிங் தவறுகளைத் தங்களுக்குச் சாதகமாக மாற்றிக்கொண்ட பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் ஃபகர் ஜமான் மற்றும் முகமது நவாஸ் ஆகியோரின் அபாரமான ஆட்டத்தால், சரிவிலிருந்து மீண்ட பாகிஸ்தான் அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்கத்திலேயே அந்த அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க ஆட்டக்காரர் சாஹிப்சாதா ஃபர்ஹான் அதிரடியாக 16 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இது இந்தத் தொடரில் அவர் நல்ல தொடக்கத்தை பெரிய ஸ்கோராக மாற்றத் தவறிய நான்காவது முறையாகும்.

PAK vs UAE Pakistan Defeats UAE to Reach Final of Tri-series

அவரைத் தொடர்ந்து சயிம் அயூப் (11), கேப்டன் சல்மான் அகா (7), முகமது ஹாரிஸ் (14), ஹசன் நவாஸ் (4) என அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்தன. ஒரு கட்டத்தில், பாகிஸ்தான் அணி 11.3 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 80 ரன்கள் மட்டுமே எடுத்து தடுமாறிக் கொண்டிருந்தது. ஐக்கிய அரபு அமீரக பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டு பாகிஸ்தானுக்கு அழுத்தம் கொடுத்தனர்.

கைவிட்ட கேட்சுகள், கைமாறிய ஆட்டம்

ஒரு கட்டத்தில் இந்தப் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது. அப்போது அவர்களின் மோசமான ஃபீல்டிங் பாகிஸ்தானுக்கு சாதகமாக அமைந்தது. குறிப்பாக, இடது கை சுழற்பந்து வீச்சாளர் ஹைதர் அலி வீசிய 16-வது ஓவரில் ஆட்டத்தின் போக்கு முற்றிலும் மாறியது. அந்த ஓவரின் ஐந்தாவது பந்தில் நவாஸ் கொடுத்த எளிதான கேட்சை மிட்விக்கெட் திசையில் நின்ற வீரர் தவறவிட்டார்.

அடுத்த பந்திலேயே, ஃபகர் ஜமான் தூக்கி அடித்த பந்தை லாங்-ஆன் திசையில் நின்ற அலிஷான் ஷராஃபு கோட்டை விட்டார். இந்த இரண்டு கேட்சுகளும் பிடிக்கப்பட்டிருந்தால், பாகிஸ்தான் அணி நிச்சயம் குறைந்த ஸ்கோரில் சுருண்டிருக்கும்.

ஃபகர் - நவாஸ் அதிரடி

இந்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொண்ட ஃபகர் ஜமான் - முகமது நவாஸ் ஜோடி, அதன்பிறகு அமீரக பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தது. கடைசி நான்கு ஓவர்களில் மட்டும் பாகிஸ்தான் அணி 69 ரன்களைக் குவித்தது. குறிப்பாக, இறுதி இரண்டு ஓவர்களில் 42 ரன்கள் விளாசப்பட்டன. அதுவரை நிதானமாக ஆடிய நவாஸ், ஜுனைத் சித்திக் வீசிய 19-வது ஓவரின் கடைசி நான்கு பந்துகளில் இரண்டு சிக்ஸர், இரண்டு பவுண்டரிகளைப் பறக்கவிட்டார். கடைசி ஓவரில் ஃபகர் ஜமான் தொடர்ச்சியாக ஐந்து பவுண்டரிகளை அடித்து அசத்தினார்.

இறுதியில், பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் குவித்தது. ஃபகர் ஜமான் 44 பந்துகளில் 10 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 77 ரன்களுடனும், நவாஸ் 27 பந்துகளில் 3 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 37 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் குவித்தது.

அப்ரார் அகமதுவின் சுழல் ஜாலம்

172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஐக்கிய அரபு அமீரக அணிக்கு, பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் அப்ரார் அகமது சிம்மசொப்பனமாகத் திகழ்ந்தார். இந்தத் தொடரில் தனது முதல் போட்டியில் விளையாடிய அவர், தனது மாயாஜால சுழலால் அமீரக பேட்டிங் வரிசையை சரித்தார். கேப்டன் முகமது வசீம் (19), ஆசிஃப் கான் (7), ராகுல் சோப்ரா (0), ஹர்ஷித் கௌஷிக் (3) என முக்கிய வீரர்களை அடுத்தடுத்து வெளியேற்றி அதிர்ச்சி கொடுத்தார்.

ஒரு முனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும், தொடக்க ஆட்டக்காரர் அலிஷான் ஷராஃபு மட்டும் தனி ஒருவராகப் போராடினார். அவர் 51 பந்துகளில் 4 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 68 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இருப்பினும், மற்ற வீரர்களின் ஒத்துழைப்பு இல்லாததால், ஐக்கிய அரபு அமீரக அணியால் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 140 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

பாகிஸ்தான் தரப்பில், அப்ரார் அகமது 4 ஓவர்கள் வீசி வெறும் 9 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றி, தனது டி20 கிரிக்கெட் வாழ்க்கையின் சிறந்த பந்துவீச்சை பதிவு செய்தார். இந்த வெற்றியின் மூலம், பாகிஸ்தான் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றதுடன், தொடரை நடத்திய ஐக்கிய அரபு அமீரக அணி போட்டியிலிருந்து வெளியேறியது. ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோத உள்ளன.

Story first published: Friday, September 5, 2025, 9:31 [IST]
Other articles published on Sep 5, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+