Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

PAK vs USA: அமெரிக்காவை பழிதீர்த்த பாகிஸ்தான்.. சுழலில் சிக்கிய எதிரணி.. புள்ளிப்பட்டியலில் முதலிடம்

கொழும்பு: 2026 டி20 உலகக்கோப்பைத் தொடரில் அமெரிக்க அணியை 32 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் அணி அபார வெற்றி பெற்றுள்ளது. சாஹிப்சாதா பர்ஹானின் அதிரடி அரைசதமும், சுழற்பந்து வீச்சாளர்களின் துல்லியமான தாக்குதலும் பாகிஸ்தானின் வெற்றிக்கு வித்திட்டன. இந்த வெற்றியின் மூலம் குரூப் ஏ பிரிவில் பாகிஸ்தான் அணி முதலிடத்தைப் பிடித்துள்ளது.

கடந்த 2024 உலகக்கோப்பையில் அமெரிக்காவிடம் தோல்வியடைந்ததற்கு, இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் அணி பழிதீர்த்துக் கொண்டுள்ளது. கொழும்பில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் ஆதிக்கம் செலுத்தியது.

PAK vs USA Sahibzada Farhan s 73 runs helps Pakistan Win Over USA and move to top in Group A

பர்ஹான் - பாபர் கூட்டணி

முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணிக்கு ஆரம்பத்திலேயே அமெரிக்க வேகப்பந்து வீச்சாளர் ஷாட்லி வான் ஷால்க்விக் அதிர்ச்சி கொடுத்தார். சயிம் அயூப் மற்றும் கேப்டன் சல்மான் அலி ஆகா ஆகியோரை ஒரே ஓவரில் வீழ்த்தி பாகிஸ்தானுக்கு நெருக்கடி தந்தார்.

எனினும், மூன்றாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த சாஹிப்சாதா பர்ஹான் மற்றும் பாபர் அசாம் ஆகியோர் அணியை சரிவிலிருந்து மீட்டனர். குறிப்பாக பர்ஹான் அமெரிக்கப் பந்துவீச்சாளர்களை நாலாபுறமும் சிதறடித்தார். அவர் 41 பந்துகளில் 73 ரன்கள் குவித்தார். அவருக்கு உறுதுணையாக நின்ற பாபர் அசாம் 32 பந்துகளில் 46 ரன்கள் சேர்த்தார். இருவரும் இணைந்து 81 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.

கடைசி நேரத்தில் ஷதாப் கான் 12 பந்துகளில் 30 ரன்கள் விளாச, பாகிஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 190 ரன்கள் என்ற வலுவான ஸ்கோரை எட்டியது. அமெரிக்கா தரப்பில் ஷாட்லி வான் ஷால்க்விக் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

சுழலில் சுருண்ட அமெரிக்கா

191 ரன்கள் என்ற கடினமான இலக்கைத் துரத்திய அமெரிக்க அணிக்கு, ஷாயன் ஜஹாங்கீர் (49 ரன்கள்) மற்றும் ஆண்ட்ரிஸ் கௌஸ் ஆகியோர் நல்ல தொடக்கம் தந்தனர். பவர் பிளே ஓவர்களில் அமெரிக்க அணி 50 ரன்களை எட்டியது.

ஆனால், சுழற்பந்து வீச்சாளர்கள் வந்த பிறகு ஆட்டம் தலைகீழாக மாறியது. முகமது நவாஸ், ஷதாப் கான், அப்ரார் அகமது மற்றும் உஸ்மான் தாரிக் ஆகிய நான்கு சுழற்பந்து வீச்சாளர்களும் அமெரிக்க பேட்ஸ்மேன்களைத் திணறடித்தனர். வீழ்ந்த 8 விக்கெட்டுகளில் 7 விக்கெட்டுகளைச் சுழற்பந்து வீச்சாளர்களே கைப்பற்றினர்.

அமெரிக்க அணியின் சுபம் ரஞ்சனே 30 பந்துகளில் 51 ரன்கள் குவித்துத் தனி ஆளாகப் போராடினாலும், வெற்றி இலக்கை எட்ட முடியவில்லை. இறுதியில் அமெரிக்க அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் மட்டுமே எடுத்தது.

முதலிடத்தில் பாகிஸ்தான்

பாகிஸ்தான் தரப்பில் உஸ்மான் தாரிக் 3 விக்கெட்டுகளையும், ஷதாப் கான் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். நவாஸ் மற்றும் அப்ரார் அகமது தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.

இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் அணி விளையாடிய இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று 4 புள்ளிகளுடன் குரூப் ஏ பிரிவில் முதலிடத்தில் உள்ளது. இந்தியாவுக்கு எதிரான போட்டிக்கு முன்னதாகப் பெற்ற இந்த வெற்றி பாகிஸ்தான் அணிக்குக் கூடுதல் நம்பிக்கையை அளித்துள்ளது. இதனால் இந்தியா - பாகிஸ்தான் போட்டி மேலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

Story first published: Tuesday, February 10, 2026, 23:44 [IST]
Other articles published on Feb 10, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+