முல்தான்: வெஸ்ட் இண்டீஸ்க்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில் முதல் ஒரு நாள் போட்டியில் நான்கு மாதங்களுக்குப் பிறகு பாகிஸ்தான் அணிக்காக பாபர் அசாம் விளையாடினார்.
இதனால் பாபர் அசாம் ரசிகர்கள் இந்த போட்டியை பெரிதும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தனர். இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்ய பணிக்கப்பட்ட வெஸ்ட் இண்டீஸ் அணி 280 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இதனை அடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி ஏழு பந்துகள் எஞ்சிய நிலையில் ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் பாபர் அசாம் 64 பந்துகளை எதிர்கொண்டு 47 ரன்கள் அடித்தார். இதில் ஐந்து பௌண்டரியும், ஒரு சிக்ஸரும் அடங்கும்.
இந்த சூழலில் வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது பாபர் அசாம் வேண்டுமென்றே விக்கெட் கீப்பரி கிளவுசை வாங்கி பந்தை தடுத்ததாகவும், இது விதிகளுக்கு மீறிய செயல் என்பதால் அவர் மீது நடவடிக்கை எடுத்த நடுவர் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு ஐந்து ரன்கள் வழங்கியதாகவும் சமூக வலைத்தளத்தில் ஒரு புகைப்படம் உலா வந்தது.
இதனை அடுத்து பலரும் பாபர் அசாமை கேலி கிண்டல் செய்தார்கள். விராட் கோலியுடன் பாபர் அசாம் ஒப்பிடப்படும் நிலையில், அவர் ஏன் முட்டாள்தனமான இந்த காரியத்தை செய்தார் என்று பலரும் விமர்சித்து வருகின்றனர். ஆனால் இப்படி ஒரு சம்பவமே நேற்று நடைபெறவில்லை என்பது தான் உண்மை.
இது குறித்து நாம் ஆராய்ந்ததில் பாகிஸ்தான் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முல்தானில் கடந்த 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியின் போது, கிண்டலுக்காக ரிஸ்வானின் கிளவுசை வாங்கி பாபர் அசாம் பந்தை பிடித்திருக்கிறார். இதனால் பாகிஸ்தான் அணிக்கு ஐந்து ரன்கள் பெனால்ட்டியை நடுவர் அப்போது வழங்கினார். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவத்தை பாபர் அசாம் நேற்று செய்ததாக கூறி பரப்பி வருகின்றனர்.எனவே இந்த செய்தி பொய்யாகும்.