ராவல்பிண்டி: சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்திய அணியின் ஜாம்பவான் விராட் கோலி படைத்திருந்த மிகப்பெரிய சாதனையை, பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் பாபர் அசாம் சமன் செய்துள்ளார். ஜிம்பாப்வேக்கு எதிரான போட்டியில் அரைசதம் அடித்ததன் மூலம் இந்த மைல்கல்லை அவர் எட்டியுள்ளார்.
பாகிஸ்தானில் நடைபெற்று வரும் முத்தரப்பு டி20 தொடரின் 4-வது போட்டி நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ராவல்பிண்டியில் நடைபெற்றது. இதில் சல்மான் அலி ஆகா தலைமையிலான பாகிஸ்தான் அணியும், ஜிம்பாப்வே அணியும் மோதின.

இந்தப் போட்டியில் 3-வது வீரராகக் களமிறங்கிய பாபர் அசாம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 52 பந்துகளை எதிர்கொண்ட அவர் 7 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 74 ரன்கள் குவித்தார். இது சர்வதேச டி20 போட்டிகளில் அவர் அடிக்கும் 38-வது அரைசதமாகும். இதன் மூலம், சர்வதேச டி20 போட்டிகளில் அதிக அரைசதங்கள் (38) அடித்த வீரர் என்ற விராட் கோலியின் உலக சாதனையை பாபர் அசாம் சமன் செய்துள்ளார்.
விராட் கோலி 2010 முதல் 2024 வரை இந்திய அணிக்காக 125 டி20 போட்டிகளில் விளையாடி 38 அரைசதங்களை விளாசியுள்ளார். பாபர் அசாம் இதுவரை 134 போட்டிகளில் (127 இன்னிங்ஸ்) விளையாடி 38 அரைசதங்களை அடித்து கோலியின் சாதனையை சமன் செய்துள்ளார். இதுதவிர பாபர் அசாம் 3 சதங்களும் அடித்துள்ளார் குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் மற்றும் அதிக முறை 50+ ஸ்கோர்களை அடித்த வீரர் என்ற பெருமையை பாபர் அசாம் தன்வசம் வைத்துள்ளார்.
இந்தப் போட்டியில், பாபர் அசாம் 74 ரன்கள் மற்றும் சாஹிப்சாதா பர்ஹான் 63 ரன்கள் குவித்தனர். இவர்கள் ஆட்டத்தால் பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 195 ரன்கள் குவித்தது. 196 ரன்கள் என்ற இமாலய இலக்கை துரத்திய ஜிம்பாப்வே அணி, பாகிஸ்தான் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 126 ரன்களுக்கு 'ஆல்-அவுட்' ஆனது.
ஜிம்பாப்வே அணியில் அதிகபட்சமாக ரியான் பர்ல் 67 ரன்கள் எடுத்தார். பாகிஸ்தான் தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் உஸ்மான் தாரிக் ஹாட்ரிக் சாதனை உட்பட 4 விக்கெட்களை வீழ்த்தினார். இறுதியில் பாகிஸ்தான் 69 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முத்தரப்பு தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.