ராவல்பிண்டி: பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் பாபர் அசாம் எப்போதுமே ஜிம்பாப்வே அணிக்கு எதிராக சிறப்பாக விளையாடுவார் என்று அவரை ஜிம் பாபர் என்றும் ரசிகர்கள் கிண்டல் செய்வார்கள். இந்த நிலையில் கடந்த 83 இன்னிங்ஸ்களாக சர்வதேச கிரிக்கெட்டில் சதமே அடிக்காத பாபர் அசாம், அண்மையில் இலங்கைக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் சதம் அடித்து ஃபார்முக்கு திரும்பினார்.
இந்த நிலையில் ஜிம்பாப்வே, இலங்கை, பாகிஸ்தான் ஆகிய அணிகள் பங்கு பெறும் முத்தரப்பு கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. இதில் முதல் போட்டியில் ராவல்பிண்டி நகரில் பாகிஸ்தானும் ஜிம்பாப்வே அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதனை அடுத்து களமிறங்கிய ஜிம்பாப்வே அணியில் தொடக்க வீரர் பிரியான் பென்னட் அதிரடியாக விளையாடி 36 பந்துகளில் 49 ரன்கள் சேர்த்தார். அதேபோன்று மற்றொரு தொடக்க வீரரான மருமானி 22 பந்துகளில் 30 ரன்கள் சேர்த்தார். முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 72 ரன்கள் சேர்த்தது. எனினும் அதன் பிறகு களம் இறங்கிய வீரர்கள் யாரும் இந்த அடித்தளத்தை பயன்படுத்திக்கொள்ள தவறிவிட்டனர்.
பிராண்டன் டைலர் 14 ரன்களிலும், ரியான் 8 ரன்களிலும் ஆட்டம் இழக்க, கேப்டன் சிக்கந்தர் ராசா மட்டும் நிதானமாக விளையாடி கடைசி வரை ஆட்டமிழக்காமல் 24 பந்துகளில் 34 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டம் இழக்க, ஜிம்பாப்வே அணி 20 ஓவர் முடிவில் எட்டு விக்கெட் இழப்பிற்கு 147 ரன்கள் எடுத்துள்ளது.
இதனை அடுத்து 148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்கள் களமிறங்கினர். ஃபர்கான் 16 ரன்களிலும், ஷயும் அயூப் 22 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். பாபர் அசாம், ஜிம்பாப்வே அணிக்கு எதிராக பொளக்க போகிறார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் டக் அவுட் ஆனார்.
அதேபோன்று கேப்டன் சல்மான் ஆகாவும் ஒரு ரன்னில் வெளியேறினர். இதனால் ஜிம்பாப்வே அணியின் வெற்றி வாய்ப்பு அதிகரித்தது. எனினும் அனுபவ வீரரான ஃபக்கர் சாமான் நடுவரிசையில் களமிறங்கி 32 பந்துகளில் 44 ரன்கள் எடுத்தார். இதேபோன்று உஸ்மான் கான் 28 பந்துகளில் 37 ரன்களும், முகமது நவாஸ் 12 பந்துகளில் 21 ரன்களும் எடுக்க பாகிஸ்தான அணி 19.2 ஓவரில் ஐந்து விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை எட்டியது. வரும் இருபதாம் தேதி இந்த தொடரின் இரண்டாவது போட்டியில் இலங்கை மற்றும் ஜிம்பாப்வே அணிகள் பல பரிட்சை நடத்துகின்றன.