கொழும்பு: இந்தியா ஏ அணிக்கு எதிரான எமர்ஜிங் ஆசிய கோப்பைத் தொடரின் இறுதிப்போட்டியில் 128 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் ஏ அணி அபார வெற்றியை பதிவு செய்து கோப்பையை வென்றுள்ளது.
ஆசிய கோப்பை எமர்ஜிங் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா ஏ அணியும், பாகிஸ்தான் ஏ அணியும் பலப்பரீட்சை நடத்தியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் யாஷ் துல் , பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் ஏ அணி, தாஹிரின் அதிரடி சதத்தால் 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 352 ரன்கள் குவித்தது. அவர் 71 பந்துகளில் 108 ரன்கள் விளாசினார்.

இதையடுத்து இமாலய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு சாய் சுதர்சன் - அபிஷேக் ஷர்மா கூட்டணி தொடக்கம் கொடுத்தது. தொடக்கம் முதலே அதிரடியாக ஆடிய இவர்கள், முதல் விக்கெட்டுக்கு 64 ரன்கள் சேர்த்தனர். சாய் சுதர்சன் 29 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற, தொடர்ந்து வந்த நிகின் ஜோஸ் 11 ரன்களில் வெளியேறினார். இருப்பினும் அதிரடியாக ஆடிய அபிஷேக் சர்மா அரைசதம் விளாசி அசத்தினார்.
இந்திய அணியை வெற்றிக்கு அழைத்து செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முகமது வாசிம் ஜூனியர் பந்துவீச்சில் ஆட்டமிழந்து 61 ரன்களில் பெவிலியன் திரும்பினார். இதன்பின் களமிறங்கிய வீரர்களில் யாஷ் துல் மட்டுமே பொறுப்புடன் விளையாடினார். மீத வீரரளான துருவ் ஜுரெல் 9 ரன்களிலும், ரியான் பராக் 14 ரன்களிலும், ஹர்சித் ராணா 13 ரன்களில் ஆட்டமிழந்தனர்.
பொறுப்புடன் ஆடிய யாஷ் துல் 41 பந்துகளில் 39 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியாக இந்திய அணி 40 ஓவர்களில் 224 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. பாகிஸ்தான் ஏ அணி தரப்பில் சுஃபியன் முஹீம் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதன் மூலம் பாகிஸ்தான் அணி எமர்ஜிங் ஆசிய கோப்பையை கைப்பற்றி அசத்தியுள்ளது. இதனால் இந்திய ரசிகர்கள் சோகமடைந்துள்ளனர்.
இந்திய அணி ஐசிசி தொடரின் முக்கியமான போட்டியில் சொதப்புவது தொடர்கதையாகி வரும் நிலையில்,இந்திய ஏ அணியும் அதேபோல் எமர்ஜிங் ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் தோல்வியடைந்திருப்பதாக ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.