கோலி தான் என் ரோல் மாடல்.. அவரை தான் பின்பற்றுகிறேன் என்கிறார் இந்த பாகிஸ்தான் வீரர்
துபாய் : பாகிஸ்தான் அணியின் பாபர் ஆசாம் நியூசிலாந்து டி20 தொடரில் சிறப்பாக செயல்பட்டு ரன் குவித்தார்.
இந்தியாவின் விராட் கோலியும் இந்த ஆண்டு முழுவதும் ரன் குவிப்பில் ஈடுபட்டார். பாகிஸ்தான் ரசிகர்கள் சிலர் பாபர் ஆசாமை கோலியுடன் ஒப்பிடுகின்றனர்.
அதை பற்றி பேச மறுத்த பாபர், கோலி தான் தனக்கு ரோல் மாடல் என தெரிவித்துள்ளார்.

இளம் வீரர் பாபர் ஆசாம்
24 வயதாகும் பாபர் ஆசாம் கிரிக்கெட்டில் செல்ல வேண்டிய தூரம் இன்னும் அதிகம் உள்ளது. தற்போதுள்ள சூழ்நிலையில், அவர் பாகிஸ்தான் அணியின் நம்பிக்கைகுரியவராக இருக்கிறார். எனினும், அவர் முக்கியமான ஆசிய கோப்பையில் பேட்டிங்கில் தடுமாறினார். அதன் பின் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து தொடர்களில் நன்றாகவே செயல்பட்டுள்ளார்.

கோலி தான் என் ரோல் மாடல்
விராட் கோலியுடன் தன்னை ஒப்பிடுவதை பற்றி பேச மறுத்த பாபர், கோலி பெரிய வீரர் என புகழ்ந்தார். அது மட்டுமின்றி, கோலி தான் தனக்கு ரோல் மாடல் எனவும் கூறினார். அவருடைய பேட்டிங் முறையைத் தான் பின்பற்றுவதாக கூறினார்.

ஆச்சரியம் தான்
பொதுவாக பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் இந்திய அணியின் நட்சத்திர வீரர்களை புகழ்வதை நாம் பல முறை பார்த்திருக்கிறோம். ஆனாலும், இந்திய வீரர் ஒருவரை ரோல் மாடலாக எடுத்துக் கொண்டு அவரை பின்பற்றுகிறேன் என ஒரு பாகிஸ்தான் வீரர் கூறி இருப்பது இன்று உள்ள சூழ்நிலையில், ஆச்சரியம் அளிக்கும் விஷயம் தான்.

தோல்வியில் இருந்து பாகிஸ்தான் மீண்டது
ஆசிய கோப்பையில் இந்தியாவிடம் இரண்டு முறை தோல்வி அடைந்து, முக்கிய போட்டியில் வங்கதேச அணியிடம் தோல்வி அடைந்தும் வெளியேறிய பாகிஸ்தான் அணி, அடுத்து ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிராக சிறப்பாக செயல்பட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications