ஆஸ்திரேலியாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பாக். சாம்பியன்!
Recommended Video

ஆஸ்திரேலியாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பாக். சாம்பியன்!- வீடியோ
ஹராரே: ஜிம்பாப்வேயில் நடந்த முத்தரப்பு ஒரு நாள் தொடரின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தானின் பக்கார் சமன் 91 ரன்கள் குவித்து, தன் அணியை வெற்றி பெறச் செய்தார். முன்னதாக, முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 183 ரன்கள் எடுத்து இருந்தது.
ஆஸ்திரேலியா அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. துவக்க ஜோடியான அர்சி ஷார்ட் மற்றும் ஆரோன் பின்ச், அதிரடியாக ஆடினர். 95 ரன்கள் குவித்த இந்த ஜோடி, 9.5 ஓவரில் பிரிந்தது. 27 பந்துகளில் 47 ரன்கள் எடுத்த நிலையில் ஆரோன் பின்ச் வெளியேறினார்.

அதன் பின், ஆஸ்திரேலிய வீரர்கள் ரன் குவிக்கும் நோக்கில் தங்கள் விக்கெட்டை வரிசையாக இழந்தனர். அர்சி ஷார்ட் 76 ரன்கள் குவித்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களை எடுக்க, 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு, 183 ரன்கள் எடுத்தது, ஆஸ்திரேலியா. பாகிஸ்தான் பந்துவீச்சில், ஆமிர் 3 விக்கெட்களும், ஷதாப் கான் 2 விக்கெட்களும் வீழ்த்தினர்.
பின் பேட்டிங் ஆட வந்த பாகிஸ்தான் அணி, மாக்ஸ்வெல் வீசிய முதல் ஓவரில் இரண்டு விக்கெட்களை இழக்க, ஆஸ்திரேலியா அணி உற்சாகமடைந்தது. ஆனால், எல்லாம் இரண்டு ஓவர்கள் மட்டுமே. மாக்ஸ்வெல் வீசிய மூன்றாவது ஓவரில் 21 ரன்கள் எடுத்து சமன் மற்றும் சர்பிராஸ் தெறிக்கவிட்டனர்.
சர்பிராஸ் 28 ரன்களுக்கு வெளியேற, அடுத்து வந்த ஷோயப் மாலிக் நிதானமாக ஆடினார். மறுபக்கம், சமன் தொடர்ந்து அதிரடி ஆட்டத்தை ஆட, பாகிஸ்தான் 19.2 ஓவர் முடிவில் வெற்றியை எட்டியது.
ஆஸ்திரேலியாவின் ஸ்டான்லேக், டை மற்றும் ரிச்சர்ட்சன் ஆகியோரது ஓவர்களை நிதானித்து ஆடிய பாகிஸ்தான் வீரர்கள், மற்ற பௌலர்களின் ஓவர்களில் ரன்குவிப்பில் ஈடுபட்டனர். தனது இரண்டாவது டி20 போட்டியில் ஆடும் ஜாக் வைல்டர்மத் ஒரே ஓவரில் நான்கு வைட்கள் வீசினார். மூன்று வைட்கள் அடுத்தடுத்து வீசி ஹாட்ரிக் சாதனையும் புரிந்தார்.
ஆட்டநாயகனாக சமன் அறிவிக்கப்பட்டார். இந்த தொடரில் அவர் மூன்று அரைசதங்கள் அடித்துள்ளார். பாகிஸ்தான் கேப்டன் சர்பிராஸ், “அவர் தன் வாழ்நாளின் சிறந்த பார்மில் இருக்கிறார்” என குறிப்பிட்டார். தற்போதைய டி20 தரவரிசையில் பாகிஸ்தான் முதலிடத்தில் இருக்கிறது. அதற்கடுத்த இடத்தில் இந்தியா இருப்பது குறிப்பிடத்தக்கது.
தோல்வி குறித்து கூறிய ஆஸ்திரேலியாவின் பயிற்சியாளர் லாங்கர், “எங்களின் அனுபவமின்மையை கடந்த ஆறு வாரங்களாக காட்டி வருகிறோம். நாங்கள் இன்னும் சிறப்பாக இருந்திருக்க வேண்டும். இந்த தொடருக்கு பின், தலைமை உட்பட அனைத்தையும் நாங்கள் உற்று நோக்க உள்ளோம்” என்று கூறினார்.
Story first published: Monday, July 9, 2018, 10:07 [IST]
Other articles published on Jul 9, 2018


Click it and Unblock the Notifications