தப்பி பிழைத்த பாகிஸ்தான்..சூடு பிடித்த அரையிறுதி பந்தயம்.. தென்னாப்பிரிக்கா, இந்தியாவுக்கு நெருக்கடி
சிட்னி : டி20 உலககோப்பையில் வாழ்வா சாவா ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் 33 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது.
இதன் மூலம் தொடர்ந்து 2வது போட்டியில் வென்ற பாகிஸ்தான் அணி, ள்ளி பட்டியலில் 4 புள்ளிகளுடன் 3வது இடத்தில் உள்ளது.
இதன் மூலம் இந்தியா, தென்னாப்பிரிக்கா, வங்கதேசம், பாகிஸ்தான் என 4 அணிகளும் அரையிறுதி பந்தயத்தில் இருப்பதால் போட்டி சூடு பிடித்துள்ளது.

ஹாரிஸ் அதிரடி
டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீரர் ரிஸ்வான் பவுண்டரியை அடித்து கெத்து காட்டியதாக நினைத்து, அதே ஓவரில் போல்ட் ஆனார். இதனைத் தொடர்ந்து தனது முதல் டி20 உலககோப்பை போட்டியில் களமிறங்கிய முகமது ஹாரிஸ், அதிரடியாக விளையாடி பாகிஸ்தான் ரசிகர்களுக்கு நம்பிக்கை கொடுத்தார். இளங்கன்று பயன் அறியாது என்ற பழமொழிக்கு ஏற்ப, ஹாரிஸ் ரபாடா பந்தை எல்லாம் பவுண்டரிக்கு விளாசினார்.

ஷதாப் கான் அதிரடி
மறுமுனையில் டெஸ்ட் மேட்ச் விளையாடி கொண்டிருந்த கேப்டன் பாபர் அசாம் 15 பந்தில் 6 ரன்கள் மட்டும் அடித்து பெவிலியன் திரும்பினார். ஹாரிஸ் 11 பந்தில் 28 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்க, ஷான் மகசூத் 2 ரன்னில் வெளியேறினார். இதனால் பாகிஸ்தான் அணி 43 ரன்களை சேர்ப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. முகமது நவாசும் 28 ரன்களில் ஆட்டமிழக்க, இஃப்திகார் மற்றும் ஷதாப் கான் ஜோடி அதிரடியாக விளையாடி பாகிஸ்தானை சரிவிலிருந்து மீட்டனர்.

186 ரன்கள் இலக்கு
35 பந்தில் இஃப்தகார் 51 ரன்கள் விளாச, ஷதாப் கான் 22 பந்தில் 52 ரன்கள் குவித்தார். இதன் மூலம் பாகிஸ்தான் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 185 ரன்கள் எடுத்துள்ளது. 186 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற களமிறங்கிய தென்னாப்பிரிக்காவின் தொடக்க வீரர் குயின்டன் டி காக் டக் அவுட்டாகியும், ரூசோவ் 3 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். தென்னாப்பிரிக்கா 9 ஓவர் முடிவில் 69 ரன்களுக்கு 4 விக்கெட் எடுத்த நிலையில், ஆட்டம் மழையால் நிறுத்தப்பட்டது.

யாருக்கு அரையிறுதி வாய்ப்பு
மழையால் ஆட்டம் மீண்டும் தொடங்கப்பட்ட நிலையில், தென்னாப்பிரிக்காவின் இலக்கு 14 ஓவரில் 142 ரன்கள் என்று மாற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்த பாகிஸ்தான் வீரர்களின் பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் தென்னாப்பிரிக்க அணி 108 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்து தோல்வியை தழுவியது. இதன் மூலம் இந்திய அணி, கடைசி ஆட்டத்தில் ஜிம்பாப்வேவையும், தென்னாப்பிரிக்க அணி நெதர்லாந்தையும் வீழ்த்த வேண்டும். இதே போன்று வங்கதேசம், பாகிஸ்தான் மோதும் ஆட்டமும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications