கொல்கத்தா : ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி விளையாடிய 6 போட்டிகளில் நான்கு ஆட்டங்களில் தோல்வியை தழுவியது. இதற்கு முக்கிய காரணம் அந்த அணியின் பேட்டிங் மற்றும் பீல்டிங் தான் என்று பலரும் கூறி வருகின்றனர்.
எனினும் பாகிஸ்தான் அணியில் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஷாகின் அப்ரிடி சிறப்பாக விளையாடி அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்தினால் அந்த அணி நிச்சயம் வெற்றி பெறும்.

ஆனால் நடப்பு உலக கோப்பை தொடரில் சில போட்டிகளில் அவர் சரியாக பந்து வீசவில்லை. இதனால் பாகிஸ்தான் அணிக்கு கூடுதல் இலக்கு நிர்ணயம் செய்யப்படுகிறது. இந்த நிலையில் வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் முதலில் பந்து வீச பணிக்கப்பட்ட பாகிஸ்தான் அணி சிறப்பாக செயல்பட்டு இருக்கிறது. குறிப்பாக ஷாகின் அப்ரிடி வழக்கம்போல் இன்றைய ஆட்டத்தில் தெறிக்க விட்டிருக்கிறார்.
ஆட்டத்தில் முதல் ஓவரில் ஐந்தாவது பந்திலே வங்கதேச அணியின் தொடக்க வீரர் டன்சித் ஹசன் விக்கெட்டை சாகின் அப்ரிடி வீழ்த்தினார். இதேபோன்று ஆட்டத்தின் மூன்றாவது ஓவரை வீசும் போது ஷாகின் அப்ரிடி, வங்கதேச வீரர் நஜ்முல் விக்கெட்டையும் கைப்பற்றினார்.
இதன் மூலம் வங்கதேச ஆணி 6 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதன் மூலம் ஷாகின் அப்ரிடி புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். அதன்படி சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 100 விக்கெட்டுகளை வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற பெருமையை படைத்தார். 23 வயதிலே 51 போட்டியில் மட்டும் விளையாடி அவர் 100 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார்.

இதற்கு முன்பாக ஆஸ்திரேலிய வீரர் மிச்சல் ஸ்டார்க் 52 போட்டிகளில் 100 விக்கெட்டுகளை கைப்பற்றியதே சாதனையாக இருந்தது. தற்போது அதனை ஷாகின் அப்ரிடி முறியடித்திருக்கிறார். பத்து பந்துகளில் இரண்டு விக்கெட்டுகளை எடுத்திருக்கிறார். எனினும் ஷாகின் அப்ரிடியை சிலர் கிண்டலும் அடித்து வருகிறார்கள். வங்கதேசத்துக்கு எதிராக மட்டும் தான் ஷாகின் இவ்வாறு பந்து வீசுவார் என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.