அவுட்டாகி விட்டு பாகிஸ்தான் பவுலர் உஸ்மானுக்கு எதிராக பொங்கிய டிம் டேவிட்.. நோ பால் என வாதம்
லண்டன்: இங்கிலாந்தில் நடைபெற்று வரும் 'தி ஹண்ட்ரட்' டி20 கிரிக்கெட் தொடரின் போது, பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் உஸ்மான் தாரிக்கின் பந்துவீச்சு பாணி விதிமுறைகளுக்கு புறம்பாக இருப்பதாக ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் டிம் டேவிட் நடுவரிடம் முறையிட்ட சம்பவம் கிரிக்கெட் வட்டாரத்தில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
பிர்மிங்ஹாமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற்ற டிரென்ட் ராக்கெட்ஸ் மற்றும் பிர்மிங்ஹாம் பீனிக்ஸ் அணிகளுக்கு இடையிலான 4வது போட்டியில் இந்தச் சம்பவம் அரங்கேறியது. டிரென்ட் ராக்கெட்ஸ் அணிக்காக களமிறங்கிய டிம் டேவிட் 2 ரன்கள் எடுத்திருந்த போது, பிர்மிங்ஹாம் பீனிக்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சாளர் உஸ்மான் தாரிக் வீசிய பந்தில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

பாகிஸ்தானை சேர்ந்த உஸ்மான் தாரிக் ஓடிவந்து திடீரென சற்று நின்று நிதானித்து, கையை பக்கவாட்டில் திருப்பி பந்துவீசும் விசித்திரமான பாணியைக் கொண்டவர். அவர் வீசிய பந்தில் ஆட்டமிழந்ததும், உஸ்மான் தாரிக் பந்தை முறைப்படி வீசாமல் எறிகிறார் என டிம் டேவிட் கள நடுவரிடம் உடனடியாக புகார் தெரிவித்தார்.
மேலும் அதனை 'நோ-பால்' என அறிவிக்குமாறு வாதிட்டதுடன், நடுவரின் முடிவை எதிர்த்து 'ரிவ்யூ' கேட்கவும் முயன்றார். ஆனால் அவரது கோரிக்கையை நடுவர் ஏற்காததால் டிம் டேவிட் மிகுந்த அதிருப்தியுடன் மைதானத்தை விட்டு வெளியேறினார்.
இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களிடையே இருவேறு கருத்துகளை உருவாக்கியுள்ளது. ஒரு தரப்பினர், "உஸ்மான் தாரிக் கையை அளவுக்கு அதிகமாக மடித்து பந்தை தெளிவாக எறிகிறார். நடுவர்கள் இதில் உடனடியாகத் தலையிட வேண்டும்" எனத் தெரிவித்து வருகின்றனர்.
அதேநேரம் மற்றொரு தரப்பினரோ, "பேட்டிங் செய்ய திணறும் போது பந்துவீச்சாளரின் பாணியைக் குறை சொல்வது பேட்டர்களுக்கு வழக்கமாகிவிட்டது" எனக் கூறி உஸ்மான் தாரிக்கிற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். சர்வதேச கிரிக்கெட் விதிமுறை 21.2 இன் படி, பந்துவீச்சாளர் கையை வீசும்போது முழங்கை மூட்டை அளவுக்கு அதிகமாக நிமிர்த்தக் கூடாது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால், உஸ்மான் தாரிக்கின் இந்த பந்துவீச்சு முறையை ஏற்கனவே பாகிஸ்தான் தேசிய கிரிக்கெட் அகாடமி இரண்டு முறை சோதனை செய்து விதிகளுக்கு உட்பட்டே அவர் பந்து வீசுவதாக கூறி இருக்கிறது. ஐசிசி விதிப்படி 15 டிகிரி வரை கையை மடக்கலாம் எனவும், உஸ்மான் தாரிக் அதற்கு உள்ளேயே கையை மடக்குகிறார் எனவும் கூறப்பட்டுள்ளது. இதற்கு முன் இந்திய சுழற் பந்துவீச்சாளர் அஸ்வினும் அவருக்கு ஆதரவு தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications

